மணல் கடத்தல் புகார் அளித்தவர் கடத்தி தாக்கப்பட்டதால் அதிர்ச்சி

ராமநாதபுரம்:மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த நபரை, மர்ம நபர்கள் காரில் கடத்தி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள வடக்கு சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 40. கனிமவள கொள்ளை, அரசு இடம் ஆக்கிரமிப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்னை குறித்து வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தொடர்ந்து புகார் அளித்து வந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை பெற்று, இது சம்பந்தமாக வழக்குகளும் தொடுத்து வருகிறார்.
நேற்று நடந்த சாத்தனுார் அரசு மேல்நிலைப் பள்ளி விழாவில் பங்கேற்ற இவர், மதியம், 2:00 மணிக்கு சாலைக்கிராமம் அருகே உள்ள புதுக்கோட்டையில் டூ வீலரில் வந்த போது, எதிரே காரில் வந்த ஒரு கும்பல், அவரை காரில் கடத்தி, சரமாரியாக தாக்கியது.
பின், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் அவரை இறக்கி விட்டு தப்பியது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலைக்கிராமம் போலீசுக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
ராதாகிருஷ்ணன் புகாரில் சாலை கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர், மேலமங்கலம் முத்துராமலிங்கம், மண்டை மணி, புகழ், பாலுச்சாமி ஆகியோர் மீது மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.