'கேஸ்' நடத்த காசில்லையாம்! செயின் பறித்தவர் சிக்கினார்

திருநெல்வேலி:தன் மீதான வழக்குகளை நடத்த, வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால், செயின் பறித்த நபரை, சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி, ராஜாக்கள் தெருவைச் சேர்ந்த பீர்முகைதீன் தாய் புகாரி பாத்திமா, 75. இவர், நேற்று காலை, 6:30 மணிக்கு வீட்டின் முற்றத்தில் தண்ணீர் தெளிக்க வந்தார். அப்போது, அங்கு காத்திருந்த நபர், பாத்திமாவின், 4 சவரன் செயினை பறித்து தப்பினார்.

உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கிருந்த, 'சிசிடிவி' காட்சிகளின் அடிப்படையில் விசாரித்ததில், செயின் பறித்தவர் கனகராஜ், 37, என்பதும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், அடிக்கடி சிறை சென்று வந்தவர் என்பதும் தெரிந்தது.

அவரை போலீசார் தேடிய போது, செயின் பறித்ததும் வீட்டிற்கு சென்றவர், குளித்து முடித்து, ஆடைகளை மாற்றிக் கொண்டு, திருச்செந்துார் செல்ல பஸ் ஏறியது தெரியவந்தது.

பாதி வழியில் பஸ்சை மடக்கி, கனகராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தன் மீதான வழக்குகளை நடத்த, வக்கீலுக்கு கொடுக்க பணம் இல்லாததால், செயின் பறித்ததாக அவர் கூறினார்.

அவரிடம் இருந்த செயினை பறிமுதல் செய்த போலீசார், கனகராஜை மீண்டும், 'கம்பி எண்ண' அனுப்பி வைத்தனர்.

Advertisement