நேட்டோவில் உக்ரைனை சேர்க்கக்கூடாது: சவுதியில் உறுதியாகச் சொன்ன ரஷ்யா

6


ரியாத்: நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதை அனுமதிக்க முடியாது என சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது ரஷ்யா மீண்டும் உறுதியாக கூறியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, 2014ல் இருந்து மோதல் இருந்து வருகிறது. கடந்த, 2022 பிப்.,ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து வருகிறது. இந்தப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இதனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு பாதிக்கப்பட்டது.


இந்த சூழ்நிலையில், மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் முயற்சியால், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பேச்சு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பான விவாதம் துவங்கியது.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சவுதி அரேபியாவின் ரியாத்தில் சந்தித்து பேசினர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், அமெரிக்கத் துாதர் ஸ்வீட் விட்கோவ் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர். சவுதி அரேபியாவின் முயற்சியில் நடந்த இந்த பேச்சு, 4 மணி நேரம் நீடித்தது.


அப்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. முதலில் இரு தரப்பு உறவுகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக பேசப்பட்டது.உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்குவது, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மீண்டும் புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன.



ரஷ்யா உறுதி




இந்த சந்திப்பின் போது, நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற தனது நிலையை உறுதியாக உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ராவ் கூறியதாவது: நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பது என்பது உக்ரைனின் கூட்டாட்சிக்கும் இறையாண்மைக்கும் விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் என்பதை அதிபர் புடின் ஏன் தொடர்ந்து கூறி வருகிறார் என்பதை விளக்கினோம். இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. அர்த்தமுள்ளதாகவும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு விதிகளை வகுக்கவும் ஒப்புக் கொண்டோம் இவ்வாறு அவர் கூறினார்.

வாய்ப்புகள்



அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ கூறுகையில், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வந்தால், பொதுவான நலன் சார்ந்த பிரச்னைகளில் புவிசார் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உலகிற்கு நல்லது. நமது உறவை நீண்ட காலத்திற்கு மேம்படுத்தும்.


இந்த சந்திப்பின் போது, மாஸ்கோ மற்றும் வாஷிங்டனில் உள்ள இரு நாட்டு தூதரகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், அமைதி பேச்சுவார்த்தைக்கு உயர் மட்ட குழுவை ஏற்படுத்துவதுடன், பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளை தேடவும் ஒப்புக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டு உள்ளது.

Advertisement