தமிழ் தமிழ் என பேசுவோர் தமிழ் இலக்கியத்திற்கு எந்த சேவையும் செய்யவில்லை: கவர்னர் குற்றச்சாட்டு

சென்னை : ''கடந்த, 60 ஆண்டுகளாக, தமிழ், தமிழ் என பேசுவோர், தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையையும் செய்யவில்லை,'' என, தமிழக கவர்னர் ரவி குற்றம் சாட்டினார்.
'கால வரிசையில் பாரதி படைப்புகள்' என, பாரதியாரின் இலக்கிய படைப்புகளை, 23 தொகுதிகளாக தொகுத்ததற்காக, சீனி விஸ்வநாதனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது.
அவருக்கும், பத்ம பூஷண் விருது பெற உள்ள, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமிக்கும், அசோக் நகர் கிளை, 'பாரத் விகாஸ் பரிஷத், வானவில் பண்பாட்டு மையம் மற்றும் திருவொற்றியூர் பாரதி பரிஷத்' அமைப்புகள் சார்பில், நேற்று பாராட்டு விழா, மயிலாப்பூர் பாரதி வித்யா பவனில் நடந்தது.
'பாரத் விகாஸ் பரிஷத்' அமைப்பின் தலைவர் வரவேற்றார். பத்ம விருது பெறும், நல்லி குப்புசாமி, சீனி விஸ்வநாதன், பாரதியார் படைப்புகளின் தொகுப்பை வெளியிடும், 'தி அலயன்ஸ் பதிப்பகம்' ஸ்ரீனிவாசன் ஆகியோரை கவுரவித்து, தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:
ஒரு பக்தன் போல, பாரதியாரின் வாழ்க்கையை ஆராய, தன் வாழ்க்கையை சீனி விஸ்வநாதன் அர்ப்பணித்து உள்ளார். பாரதியார், சுதந்திர போராட்ட வீரர், தேசியவாதி, கவிஞர் என, பல பரிமாணங்களில் இருந்தவர்.
நான் தமிழகம் வந்த போது, ராஜ்பவனில் பல சிலைகள் இருந்தாலும், அங்கே பாரதி சிலை இல்லை. 'பாரதி வித்யா பவன்' அமைப்பினர், பாரதியார் சிலையை நிறுவி தந்தனர்.
தமிழ் மொழியில் சிறந்தவர்கள் யாராக இருந்தாலும், கடந்த இரண்டு நுாற்றாண்டுகளில், பாரதியாருக்கு நிகரான ஒருவர் இல்லை. பாரதியார் சாதாரண மனிதர் அல்ல; அவதார புருஷர். பாரதியார் பாரதம் குறித்து பேசி உள்ளார். தேசத்தை தெய்வமாக பார்த்தார்.
இதனால், துரதிருஷ்டவசமாக பாரதியார் குறித்து பேசும் சூழல், தற்போது முற்றிலும் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பாரதம் என்பது நாடு அல்ல என்ற சூழல் இங்கு நிலவுகிறது.
அகண்ட பாரதம்,'சேதமில்லா ஹிந்து ஸ்தானம்' குறித்து வலியுறுத்தியவர் பாரதியார். தமிழுக்கும், காசிக்கும் உள்ள ஒற்றுமை குறித்தும் பேசியுள்ளார்.
பிரிட்டிஷார் ஆங்கிலத்தை முக்கியத்துவப்படுத்தி, தமிழை தரம் தாழ்த்த செய்த போது, அவர்களை பாரதியார் எதிர்த்தார். அந்த சூழலிலும் தமிழை வளர்த்தார்.
தேச பக்தர்கள் அவரின் விஸ்வரூபம் குறித்து பேசுகின்றனர். பாரதியார் இன்னும் மக்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பாரதியாரின் பெயரிலேயே பல்கலை இருந்தும், பாரதியாருக்கு இருக்கை இல்லை. அழுத்தம் காரணமாகவே, பல்கலையில் பாரதியாருக்கு இருக்கை அமைக்காமல் இருக்கின்றனர்.
துணை வேந்தர்கள் மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்; இந்த நிலை மாறும். கடந்த, 60 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என பேசுவோர், தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் எந்த சேவையையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.




மேலும்
-
'போக்சோ'வில் வாலிபர் கைது
-
செலவு கணக்காளர் பெயர் சேர்க்க வலியுறுத்தல்
-
பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலி 119 செயலிகளுக்கு அரசு தடை
-
அரசு மீதான கோபத்தை பாடல்களாக தெறிக்க விடும் அரசு ஊழியர்கள்
-
நுங்கம்பாக்கம் வியாபாரி வீட்டில் ரூ.1.5 கோடி நகை திருடிய டிரைவர்
-
'பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை᳚' * பன்னீர்செல்வம் கமென்ட்