விவசாயமற்ற பணிக்கு உரம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து
சேலம்:சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:சேலம் மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில், 70,140 ெஹக்டரில் நிலக்கடலை, மக்காச்சோளம், எள், பருத்தி, பயிறு வகைகள், கரும்பு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அதற்கு தேவையான அனைத்து வகை உரங்கள், தனியார், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை நடக்கிறது.
அண்மையில் அண்டை மாவட்டங்களில் யுரியா பயன்பாடு விவசாயத்துக்கு அல்லாமல் வேறு வகையில் பயன்படுத்த இருப்பு வைக்கப்பட்டிருப்பதை, தரக்கட்டுப்பாடு பிரிவு அலுவலர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால் மாவட்டத்தில் மொத்த, சில்லரை உர விற்பனையாளர்கள், உர வகைகளை விவசாய பயன்பாட்டுக்கு மட்டும் விற்க வேண்டும். குறிப்பாக யுரியா உர வகைகளை விற்கும்போது விவசாயிகள் தேவை அறிந்து உரிய ஆதார் எண் பெற்று, விற்பனை முனைய கருவி மூலம் விற்க வேண்டும். உர வகைகளின் இருப்பு, விற்பனையில் முறைகேடு கண்டறியப்பட்டால் உரிய நபர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.