டவுன் பஞ்சாயத்து கழிவுநீரை ஏரிக்கு விட எதிர்ப்பு தெரிவித்து மறியல்


டவுன் பஞ்சாயத்து கழிவுநீரை ஏரிக்கு விட எதிர்ப்பு தெரிவித்து மறியல்


சேந்தமங்கலம்:காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து கழிவுநீரை, துத்திக்குளம் ஏரிக்கு விட எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்.,ல் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தையும், டவுன் பஞ்., நிர்வாகம் வாய்க்கால் வழியாக குழாய்கள் அமைத்து, துத்திக்குளம் ஏரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. இதையடுத்து, நேற்று அதற்கான பணிகள் நடத்து
வதற்கான முன்னேற்பாடு நடந்தது.இதனால், அதிர்ச்சியடைந்த துத்திக்குளம் பகுதி மக்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள துத்திக்குளம் ஏரியில், காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., கழிவுநீ‍ர் கலந்தால் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் குடிக்க முடியாத நிலை ஏற்படும். கால்நடைகள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து, 200க்கும் மேற்பட்டோர் காளப்பநாய்க்கன்பட்டி மெயின் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த, சேந்தமங்கலம் போலீசார் மறியல் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரிக்கு கழிவு நீர் கொண்டு செல்வதை நிறுத்தினால்தான், மறியல் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் வெங்கடேசன், 'காளப்பநாய்க்கன்பட்டி கழிவுநீரை, துத்திக்குளம் ஏரிக்கு விட மாட்டோம்' என தெரிவித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால், 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

Advertisement