ஹிந்தி பேசும் மாணவர்கள் தமிழ் படிப்பது ஏன்? பனாரஸ் பல்கலை உதவி பேராசிரியர் விளக்கம்

''தமிழகம் வளர்ந்த மாநிலமாக இருப்பதால், வேலைவாய்ப்புக்கும், நிரந்தர வாழ்க்கை சூழலை அமைத்துக் கொள்ளவும், ஹிந்தி பேசும் மாணவர்கள் ஆர்வமாக தமிழ் படிக்கின்றனர்,'' என, உத்தர பிரதேச மாநிலம், பனாரஸ் ஹிந்து பல்கலை உதவி பேராசிரியர் ஜெகதீசன் கூறினார்.
அவர் கூறியதாவது:
பனாரஸ் ஹிந்து பல்கலையில், பேராசிரியர் ராதாகிருஷ்ணன் துணைவேந்தராக 1945ல் இருந்த போது, தமிழ் பிரிவு துவங்கப்பட்டது. இதற்கு, மத்திய அரசு செலவு செய்கிறது. பின், 1977ல் தமிழக அரசு உதவியில், இரண்டாவது பணியிடம் துவங்கி செயல்பட்டு வருகிறது.
முனைவர் பட்டம்
இதில், இந்த ஆண்டு, 15 வடமாநில மாணவர்கள், தமிழை விருப்ப பாடமாக படிக்கின்றனர். ஐந்து மாணவர்கள் இளங்கலை படிப்பும், ஐந்து மாணவர்கள் முனைவர் பட்டமும் படிக்கின்றனர்.
இங்கு, அனைத்து இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளை, தமிழோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும் வசதியும் உள்ளது.
கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில், தேசிய புத்தக நிறுவனம் சார்பில், ஹிந்தியில் இருந்து தமிழுக்கு, 10 நுால்கள் மொழி பெயர்க்கப்பட்டன.
தமிழகம் வளர்ந்த மாநிலமாக இருப்பதால், வேலைவாய்ப்புக்கும், நிரந்தர வாழ்க்கை சூழலை அமைத்துக் கொள்ளவும், ஹிந்தி பேசும் மாணவர்கள், ஆர்வமாக தமிழ் படிக்கின்றனர்.
தமிழர்களுடைய வாழ்க்கையில், காசி பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழுக்கும், காசிக்குமான உறவு தொன்று தொட்டு நீண்டு வருகிறது. இதன் பிரதிபலிப்பாக, காசி தமிழ் சங்கமம் நிகழ்வு அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு, பல்கலை தமிழ் பிரிவு ஊன்றுகோலாக இருக்கிறது. பாரதி, தன் தந்தை மறைவுக்கு பின், அவரது அத்தை குப்பம்மாளுடன் காசிக்கு வந்தார்.
இங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம், பிராந்திய மொழியான போஜ்புரி கற்றுக் கொண்டார். அதில், புலமையும் அடைந்தார். நான்கரை ஆண்டுகளில் மிகப்பெரிய ஆளுமை மாற்றத்தை, காசி அவருக்கு ஏற்படுத்தியது.
அன்னி பெசன்ட், மாளவிகா, திலகர் போன்ற ஆளுமைகளை சந்தித்தார். இதன் தாக்கம், பின் அவர் எழுதிய எழுத்துக்களில் தென்பட்டது. பாரதியின் நுாற்றாண்டு நினைவையொட்டி, பனாரஸ் பல்கலையில், பாரதி பெயரில் ஒரு இருக்கையை துவங்க, பிரதமர் மோடி 2021ல் முன்மொழிந்தார்.
இங்குள்ள, தமிழ் பேராசிரியர்கள், தமிழ் துறை அல்லாத தமிழக பேராசிரியர்கள் இணைந்து, ஒரு குழு அமைத்து, பாரதி இருக்கை பணிகளை மேற்கொள்கின்றனர். இதில், கருத்தரங்கம், மொழி பெயர்ப்பு, பாரதியை பிற மொழிகளுக்கு எடுத்து செல்லுதல் போன்ற பணிகள் நடக்கின்றன.
உதவித்தொகை
பல்கலையில், தங்கும் விடுதி குறைவாக உள்ளதால், தமிழகத்தில் இருந்து படிக்க வரும் மாணவர்கள், வெளியில் தங்கும் சூழல் உள்ளது. அவர்களுக்கு, தமிழக அரசு உதவி தொகை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
தத்துவ துறையில் சைவ சிந்தாந்தம் பயிற்றுவிக்க, ஒரு இணை பேராசிரியர் பணியிடம் உள்ளது. தகுந்த பேராசிரியர் கிடைக்காததால், அந்த பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் இருந்து சைவ சிந்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் முன்வந்தால், இந்த பணியிடம் விரைவில் நிரப்பப்படும். இது குறித்த விபரங்களுக்கு, பனாரஸ் பல்கலை தத்துவத் துறையை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் எங்கு சென்றாலும், ஒரு சங்கம் அமைத்து குழுவாக செயல்படுவது இயல்பான குணம். மும்பை, பெங்களூரு, டில்லி போல், இங்கு தமிழ் சங்கம் இல்லை. இங்குள்ள தமிழர்கள் நலன் கருதி, வாரணாசி மாவட்ட கலெக்டர் ராஜலிங்கத்தின் வழிகாட்டுதலில், காசி தமிழ் சங்கம், வாரணாசி தமிழ் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் துவங்கும் பணி நடந்து வருகிறது. தமிழக கலாசார, பண்பாட்டு, இலக்கிய மேம்பாட்டுக்காக இச்சங்கம் செயல்படும் என, உதவி பேராசிரியர் ஜெகதீசன் கூறினார்.
- நமது நிருபர் -

மேலும்
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
-
தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
-
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்