சினிமா இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்து முடக்கம்

சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், சினிமா பட இயக்குநர் ஷங்கரின், 10.11 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில், எந்திரன் என்ற படத்தை, ஷங்கர் இயக்கினார். இப்படம், 2010 அக்., 1ல் வெளியாகி, 290 கோடி ரூபாய் வரை வசூலை குவித்தது.

கடந்த 2011ல், ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர், எந்திரன் படத்திற்கு எதிராக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், 'நான், 1996ல், இனிய உதயம் என்ற பத்திரிகையில், ஜூகிபா என்ற கதையை எழுதினேன். இக்கதையை திருடித்தான், ஷங்கர், எந்திரன் படத்தை எடுத்துள்ளார். ஷங்கர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும், ஷங்கர் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், எந்திரன் படத்திற்காக, ஷங்கருக்கு ஊதியமாக, 11.50 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது என்பதும், ஜூகிபா மற்றும் எந்திரன் படத்தின் கதைக்கு நிறைய ஒற்றுமைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதை, எப்.டி.ஐ.ஐ., எனப்படும், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனமும் உறுதி செய்துள்ளதாக, அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனால், காப்புரிமை சட்டத்தை, ஷங்கர் மீறி இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான, 10.11 கோடி ரூபாய் மதிப்புள்ள, மூன்று அசையா சொத்துக்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முடக்கி உள்ளனர்.

Advertisement