விவசாயி தெரிவித்த குறையை உடனடியாக தீர்த்த கலெக்டர்

துாத்துக்குடி:குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டரின் செயல், பாரட்டை பெற்றது.

துாத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. மெஞ்ஞானபுரம் சுற்றுப்பகுதி விவசாயிகள் சங்க தலைவர் டேனியல் இஸ்ரவேல் பேசும்போது, 'கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரம், போதிய இருப்பு இல்லை' என குற்றஞ்சாட்டினார்.

அதை மறுத்த கூட்டுறவு துறை பெண் அதிகாரி ஒருவர், 'மெஞ்ஞானபுரம் கூட்டுறவு சங்கத்தில் போதிய உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தார். யார் சொல்வது உண்மை என உடனே தெரிந்துகொள்ள, கூட்டுறவு சங்க செயலரை தொடர்பு கொண்ட கலெக்டர், உரம் இருப்பு குறித்து விசாரித்தார். போதிய இருப்பு உள்ளதாக அவர் கூறியதால், கலெக்டர் கோபமடைந்தார்.

கூட்டுறவு சங்க உறுப்பினர் சுடலைக்குமார், கடந்த 15ம் தேதி கூட்டுறவு அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தபோது, டி.ஏ.பி., உரம் இருப்பு இல்லை எனக்கூறி அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டதாக, புகார் தெரிவித்த விவசாயி கூறினார்.

சுடலைக்குமாரை தொடர்பு கொண்ட கலெக்டர், இது குறித்து விசாரித்தபோது, 'உரம் இருப்பு இல்லை' என கூறியது, கூட்டுறவு சங்க அலுவலக உதவியாளர் லட்சுமணன் என, தெரியவந்தது. லட்சுமணன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறைதீர் கூட்டத்தில் தெரிவித்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டரை, விவசாயிகள் பாராட்டினர்.

Advertisement