மின்மாற்றியில் சிக்கிய கால்பந்து சிறுவன் பலி; ஒருவர் படுகாயம்

செங்குன்றம், செங்குன்றம் அருகே பம்மதுகுளம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாம், 13. காவாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர், நண்பர்களுடன் சேர்ந்து நேற்று மாலை கங்கையம்மன் கோவில் அருகே உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடியுள்ளார்.

அப்போது பந்து மைதானம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் சிக்கியது. பந்தை, அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ், 13, என்ற சிறுவன் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி எடுக்க முயன்றுள்ளார். சாம் பந்தை வாங்க டிரான்ஸ்பார்மர் கீழே நின்றிருந்தான்.

டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய கணேஷ், மின்சாரம் பாய்ந்து, கீழே காத்திருந்த சாம் மீது விழுந்து உள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும், பாடியநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சாம் பரிதாபமாக இறந்தார். கணேஷ் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement