தீப்பிடித்த ஆம்னி பஸ் 26 பேர் உயிர் தப்பினர்

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதில், பயணியர் 26 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

சென்னையில் இருந்து திருநெல்வெலி மாவட்டம் பாபநாசம் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று, 23 பயணியருடன் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் புறப்பட்டது. பஸ்சை, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திலகர்புரத்தை சேர்ந்த அய்வர்ராஜா, 30, ஓட்டினார். பெரம்பலுார் மாவட்டம், சின்னாறு அருகே நள்ளிரவு 12:30 மணியளவில் பஸ் வந்தபோது, பின்புற டயர் வெடித்தது.

அப்போது ஏற்பட்ட தீ, பேட்டரி ஒயரில் பற்றி பஸ் முழுதும் தீப்பிடித்தது. உடனடியாக, டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இந்த விபத்தில், பஸ் டிரைவர், கண்டக்டர், மாற்று டிரைவர், 23 பயணியர் என, 26 பேர் தப்பினர். பெரம்பலுார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மங்கலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement