கிணற்றில் விழுந்த சிறுத்தை கூண்டு வைத்து பத்திரமாக மீட்பு

பாலக்காடு:வீட்டு கிணற்றில் விழுந்த சிறுத்தையை கூண்டில் மீட்ட வனத்துறையினர், அதை பத்திரமாக பரம்பிக்குளம் வனத்தில் விடுவித்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே உள்ள நெல்லியாம்பதி வன எல்லை பகுதியான புலயம்பாறையில், ஆண்டப்பன் என்பவரின் வீட்டில், தடுப்புச்சுவர் இல்லாத கிணற்றுக்குள், சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் இரவு தவறி விழுந்தது.

தகவலறிந்த நெல்லியாம்பதி வனத்துறையினர், நள்ளிரவு 12:00 மணிக்கு, சிறப்பு கூண்டு ஒன்றை கிணற்றுக்குள் இறக்கி, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் பாதுகாப்பாக மீட்டனர்.

நெல்லியாம்பதி வனச்சரக அதிகாரி ஜெயேந்திரன் கூறுகையில், “இரை தேடி வந்த சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

''இந்த ஆண் சிறுத்தைக்கு, ஒன்றரை வயது இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருப்பது மருத்துவர் நடத்திய பரிசோதனையில் தெரிந்தது. இதையடுத்து, பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டது,” என்றார்.

Advertisement