ஏ.டி.எம்.,மில் எரிந்த நோட்டு பணம் எடுத்தவருக்கு அதிர்ச்சி

வாலாஜாபேட்டை:ஏ.டி.எம்., இயந்திரத்தில் எரிந்த ரூபாய் நோட்டு வந்ததால், பணம் எடுத்தவர் அதிர்ச்சி அடைந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவை சேர்ந்தவர் சரவணன், 30. இவர், நேற்று முன்தினம் நெமிலி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, 'இண்டியா - 1' ஏ.டி.எம்., மையத்தில், 2,000 ரூபாய் எடுத்தார். அதில், 100 ரூபாய் நோட்டு ஒன்று எரிந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சிலருக்கு, பென்சில், பேனாவால் எழுதப்பட்டது, எரிந்த நிலையிலும், அழுக்கு படிந்த ரூபாய் நோட்டுகளும் வந்துள்ளன. அந்த ஏ.டி.எம்.,மில் வரும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் கேட்டால், அதை வங்கியினர் வாங்க மறுக்கின்றனர்.

'இண்டியா 1' ஏ.டி.எம்., மையத்தில், சேதமில்லாத ரூபாய் நோட்டுகளை வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, வாடிக்கையாளர்கள் நெமிலி போலீசாரிடம் தெரிவித்தனர்.

Advertisement