20,000 பைலட்கள் தேவை மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி “நம் நாட்டிற்கு, வரும் ஆண்டுகளில் குறைந்தது, 20,000 விமானிகள் தேவைப்படுவர்,” என, மத்திய விமான போக்குவரத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

விமானிகளுக்கு மின்னணு முறையில், 'லைசென்ஸ்' வழங்கும் திட்டத்தின் துவக்க விழா புதுடில்லியில் உள்ள உதான் பவனில் நேற்று நடந்தது. இதில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பங்கேற்று பேசியதாவது:

போக்குவரத்து இணைப்பு, பொருளாதார வளர்ச்சி, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் முதுகெலும்பாக விமான போக்குவரத்து விளங்குகிறது.

நம் நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், மேலும் 50 விமான நிலையங்கள் திறக்கப்படும்.

விமான நிலையங்கள் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து, 157 ஆக உயர்ந்துள்ளது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் விமான சந்தையான நம் நாட்டில், விமான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் குறைந்தது, 20,000 பைலட்கள் தேவைப்படுவர்.

மின்னணு லைசென்ஸ் அறிமுகம் செய்யப்படுவதன் வாயிலாக பைலட்கள் தங்கள் உரிமங்களை விரைவாகவும், எளிதாகவும் பெற முடியும். மின்னணு லைசென்ஸ் திட்டத்தை, சீனாவுக்கு பின் அறிமுகம் செய்யும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement