பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்களால் நெரிசல்

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, பள்ளிப்பட்டு, திருத்தணி, சோளிங்கர், வேலூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதட்டூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, திருத்தணி மற்றும் சென்னையில் பள்ளி, கல்லூாரிக்கு சென்று படிக்கும் மாணவர்கள் மற்றும் அன்றாட வேலைக்கு செல்பவர்கள் பேருந்து வாயிலாக திருத்தணிக்கு பயணிக்கின்றனர்.

பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாத நிலையில், தனியார் வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதனால், பேருந்துக்காக காத்திருப்போர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அத்திமாஞ்சேரிபேட்டை, சுரக்காய்பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள், பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படாமல், நகருக்கு வெளியே இருந்து சுழற்சி முறையில் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணியரை ஏற்றி செல்லும் விதமாக ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement