பாக்.,குடன் இந்தியா பேச்சு நடத்தாது: முதல்வர் ஒமர் அப்துல்லா திட்டவட்டம்

11

ஸ்ரீநகர் : கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, 'பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும்' என கூறி வந்த, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, இப்போது, ஜம்மு - காஷ்மீர் முதல்வராகியுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவது வீண் என கூறினார்.


கடந்த, 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரான ஒமர் அப்துல்லா, வடக்கு காஷ்மீரில் பேசும் போது, 'வாஜ்பாய் கூறியது போல, நண்பர்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும்; அண்டை மாநிலத்தை மாற்ற முடியாது என்பதில் நானும் உறுதியாக உள்ளேன். பாகிஸ்தான் எப்போதும் நம் அண்டை நாடாகவே விளங்கும். எனவே, பாகிஸ்தானுடனான பிரச்னைகள் குறித்து, அந்நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும்' என்றார். அவரை போலவே, அவரின் தந்தை பரூக் அப்துல்லாவும் கருத்து தெரிவித்தார்.


இந்நிலையில், பி.பி.சி., செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியதாவது: இந்திய விவகாரங்களில் தலையிடுவதை, பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. மேலும், எல்லையில் இந்திய ராணுவத்துடன் அடிக்கடி சண்டையிட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக, எல்லையில் முகாம்களை அமைத்து வருகிறது.


நிலைமை இவ்வாறு இருக்கையில், அந்நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்துவது என்பது இயலாத ஒன்று. அவ்வாறு பேச்சு நடத்துவது வீணானதும் கூட. எனவே, இந்தியா மேற்கொள்ளும் அமைதி நடவடிக்கைகளில் பாகிஸ்தான் பங்கேற்று, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். அதுபோல, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின், 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்துவது என்பதும், இப்போதைக்கு இயலாத காரியம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


இதன் வாயிலாக, 'பாகிஸ்தான் ஆதரவு இன்றி, ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முடியாது' என்ற அவரின் முந்தைய கருத்தில் இருந்து, இப்போது, பின்வாங்கியுள்ளது தெளிவாகிறது. மேலும், அந்நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்த வேண்டும் என்ற கருத்தையும் அவர் வாபஸ் பெற்றுள்ளார் என்பதும் தெளிவாகிறது.

Advertisement