அரசு விழாவில் கேள்வி கேட்டபா.ஜ., நிர்வாகியால் சலசலப்பு


அரசு விழாவில் கேள்வி கேட்டபா.ஜ., நிர்வாகியால் சலசலப்பு


ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம், பிலிப்பாக்குட்டை ஆகிய இடங்களில், நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன் முகாம்களை தொடங்கி வைத்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் முன்னிலை வகித்தார். முத்துக்காளிப்பட்டி முகாமில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு துறை தொடர்பான புகார்களுக்கு நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் வந்திருந்தனர். அப்போது, பா.ஜ., மாநில நிர்வாகி லோகேந்திரன், 'முத்துக்காளிப்பட்டியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என, கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசு கண்டுகொள்ளவில்லை. நகராட்சியுடன் கிராமத்தை இணைத்துவிட்டால், 100 நாள் வேலைத்திட்டத்தில் இப்பகுதி மக்களுக்கு வேலை கிடைக்காது. இந்த கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் உள்ளனர்' எனக்கூறினார்.
அப்போது மேடையில் இருந்த, எம்.பி., ராஜேஸ்குமார், 'இதுபோன்ற நபர்கள் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்பட பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தற்போது, பேரூராட்சிகளிலும், 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் நகராட்சிக்கும் விரிவுபடுத்தப்படும்' என்றார். இதனால், அரசு முகாமில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement