கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'

புதுடில்லி: ''கோலி தனக்குத் தானே நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்கிறார். மனதளவில் நிதானமாக செயல்பட்டால் மீண்டும் ரன் மழை பொழியலாம்,'' என கும்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய அணி 'சீனியர்' வீரர் கோலி 36. கடந்த 2023 உலக கோப்பை தொடரில் அதிக ரன் குவித்து அசத்தினார். இதன் பின் பங்கேற்ற 6 ஒருநாள் போட்டியில் 137 ரன் மட்டும் எடுத்தார். ஒரு அரைசதம் தான் அடித்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 22 ரன்னில் அவுட்டானார். தவிர தொடர்ந்து 6வது முறையாக சுழற்பந்துவீச்சில் வீழ்ந்தார்.
இந்திய 'சுழல்' ஜாம்பவான் அனில் கும்ளே 54, கூறியது:
கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்து வீரர்களுக்கும் கடினமான காலம் இருக்கும். கோலி பேட்டிங்கை பார்க்கும் போது, இழந்த பார்மை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காக, சற்று அதிகப்படியான முயற்சிகளில் ஈடுபடுகிறார். தனக்குத் தானே நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்கிறார். அவர் பேட்டிங் செய்யும் போது, இது நன்றாகத் தெரிகிறது.
சுழற்பந்துவீச்சிற்கு எதிராக விளையாட அதிக தன்னம்பிக்கை வேண்டும். இதுபோன்ற பந்துவீச்சை எதிர்கொள்ள கோலி, கடினமாக முயற்சி செய்கிறார்.
ரோகித்தை பாருங்கள், சுதந்திரமாக விளையாடுகிறார். இதுபோல கோலியும், நிதானமாக செயல்பட்டு, இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதும், சாம்பியன்ஸ் டிராபியில் ரன் மழை பொழியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தன்னம்பிக்கை இல்லையா
இந்திய அணி முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,'' ஆஸ்திரேலியாவில் சதம் (பெர்த்தில் 100 ரன்) அடித்த பின் அந்த 'பார்மை' தொடர்ந்திருந்தால் போதும். 'பார்மில்' இல்லாத நேரத்தில், தன்னம்பிக்கை இழந்து இருந்தால், திடீரென பெரிய 'ஷாட்' அடிக்கும் திறன், தைரியம் நமக்கு கிடைக்காது. கோலி இந்த சூழலில் தான் தற்போது உள்ளார்,'' என்றார்.

Advertisement