இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...

பாங்காக்: ஆசிய கோப்பை வில்வித்தையில் அதிக புள்ளி எடுத்து இந்தியா உலக சாதனை படைத்தது.
தாய்லாந்தில் ஆசிய கோப்பை வில்வித்தை 'ரேங்கிங்' தொடர் (21 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்று நடந்தது. இந்தியாவின் குஷால் தலால் (712 புள்ளி), கணேஷ் மணிரத்னம் (711), மானவ் கணேஷ்ராவ் (706) இணைந்து மொத்தம் 2129 புள்ளி எடுத்து, புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன், இதே கூட்டணி, 2024ல் 2111 புள்ளி எடுத்திருந்தது.
தொடந்து அணிகளுக்கான பிரிவில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறியது.இந்திய அணி 5-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று சீனாவை சந்திக்கிறது.
'ரிகர்வ்' கலப்பு அணிகளுக்கான பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பசந்தி, விஷ்ணு ஜோடி, மலேசியாவின் ஹரிஸ்யா, ஈவன்ரிச் ஜோடியை சந்தித்தது. போட்டி 4-4 என சமனில் முடிய, இந்திய அணி 'ஷூட் ஆப்' முறையில் 19-17 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
'ரிகர்வ்' ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் விஷ்ணு, கோல்டி, ராகுல் ஜோடி, 5-3 என ஆஸ்திரேலியாவின் கிராலே, லியான், ஜாக்சன் ஜோடியை சாய்த்தது.

Advertisement