சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'

புதுடில்லி: சிறப்பாக செயல்படாத வீரர், வீராங்கனைகள் மத்திய அரசின் ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் நோக்கத்தில், மத்திய அரசின் சார்பில் 'ஒலிம்பிக் பதக்க திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இதன் படி திறமையான நட்சத்திரங்கள் இதில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உள்ளூர், வெளிநாடு பயிற்சி வசதிகள், மாதம் ரூ. 50,000 நிதி உதவி தரப்படுகின்றன.
அடுத்து 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறது இந்தியா. இதனால், சமீபகாலமாக திறமையாக செயல்படாதவர்கள் கண்டறியப்பட்டு, பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி 179 பேர் கொண்ட பட்டியல் 94 ஆனது. பாரா விளையாட்டில் 78ல் இருந்து 42 ஆக குறைக்கப்பட்டது.
பாரிசில் பதக்கம் வென்றவர் அல்லது உலகத் தரவரிசையில் 'டாப்-16' பட்டியலில் இருந்தால், புதிய பட்டியலில் இடம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி தடகள பட்டியல் 30ல் இருந்து 3 ஆக குறைந்தது. நீரஜ் சோப்ரா, அவினாஷ் சபில், முரளி ஸ்ரீசங்கர் மட்டும் இதில் உள்ளனர்.
தஜிந்தர் சிங் பால் (குண்டு எறிதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), முகமது அனாஸ் (தடகளம்) உள்ளிட்டோருக்கு கல்தா கொடுக்கப்பட்டது.
குத்துச்சண்டையில் லவ்லினா, நிகாத் ஜரீன் தவிர மற்றவர்கள் கழற்றிவிடப்பட்டனர். துப்பாக்கிசுடுதலில் 25ல் இருந்து 17 பேர் மட்டும் உள்ளனர். பாட்மின்டனில் சிந்து, லக்சயா சென், சாத்விக்சாய்ராஜ், சிராக், நீச்சலில் தினிதி தக்கவைக்கப்படலாம்.
போபண்ணா இல்லை
டென்னிசில் போபண்ணா, சுமித் நாகல், டேபிள் டென்னிசில் தமிழக வீரர்கள் சரத்கமல், சத்யன், மல்யுத்தத்தில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

Advertisement