இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி

1

துபாய்: ''ஒருநாள் போட்டியில் இந்தியா பலம் வாய்ந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது,''என கங்குலி தெரிவித்தார்.

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.


நாளை நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முதல் சவாலில் நியூசிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் அணி, கட்டாய வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கும். மறுபக்கம் வங்கதேசத்தை சாய்த்த இந்திய அணி, பாகிஸ்தானை வென்று அரையிறுதியை உறுதி செய்ய முயற்சிக்கும். உலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டி குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து.

கங்குலி, இந்தியா: இந்திய அணியின் பேட்டிங் அசுர பலத்தில் உள்ளது. 'டாப்-ஆர்டரில்' 5 சுப்மன் கில் உள்ளனர். அனைவரும் சதம் விளாசி வெற்றி தேடி தரக்கூடியவர்கள். அக்சர் படேல் 5வது இடத்தில் வருகிறார் என்றால், பேட்டிங் பலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நடுவில் கொஞ்சம் தடுமாறினாலும் ராகுல், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா என பெரும் படையே உள்ளது.


கடந்த 25 ஆண்டுகளில் ஐ.சி.சி., உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக சில போட்டிகளில் தான் தோற்றுள்ளோம். இம்முறை பாகிஸ்தானுக்கு எதிராக வெல்வதோடு மட்டுமல்லாமல், சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றவும் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜடேஜா குல்தீப் அடங்கிய பவுலிங் கூட்டணி தொடரலாம். துபாய் ஆடுகளம் 'சுழலுக்கு' சாதகமாக இருக்கும். பாகிஸ்தான் வீரர்கள் 'சுழலில்' தடுமாறும் நிலையில், இந்திய அணியில் தரமான 'ஸ்பின்னர்'கள் இருப்பது பலம்.


ஷாகித் அப்ரிதி, பாக்.,: பாகிஸ்தான் உடன் ஒப்பிடுகையில் இந்திய அணியில் அதிக 'மேட்ச் வின்னர்கள்' உள்ளனர். 'மேட்ச் வின்னர்' என்பவர் தனிநபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடியவர். தற்போதைய பாகிஸ்தான் அணியில் இத்தகைய வீரர்கள் இல்லை. இந்திய அணியின் 'மிடில்-ஆர்டர்', 'லோயர் ஆர்டர்' பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. இதனால் வெற்றி பெற வாய்ப்பு அதிகம்.

யுவராஜ் சிங், இந்தியா: துபாயில் போட்டி நடப்பது பாகிஸ்தானுக்கு சாதகம். இங்கு அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளனர். மைதான சூழ்நிலை, மந்தமான ஆடுகளத்தின் தன்மை பற்றி அறிந்து வைத்திருப்பர். இந்திய அணியில் அதிக 'மேட்ச் வின்னர்'கள் உள்ளனர் என்ற அப்ரிதியின் கருத்து சரியே. ஆனால், இந்தியா-பாக்., மோதலின் முடிவை 'மேட்ச் வின்னர்'கள் மட்டும் நிர்ணயிக்க இயலாது. எதிர்பார்ப்புகளுக்கு அஞ்சாமல் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் அணிக்கே வெற்றி வசப்படும்.



10 வினாடிக்கு ரூ. 50 லட்சம்


இந்தியா-பாக்., மோதும் போட்டியின் போது ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. 10 வினாடிக்கு ரூ. 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். துபாய் செல்வதற்கான விமான கட்டணம், ஓட்டல் அறை வாடகை 20-30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement