கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு பைபர் படகுகளில் சென்றுவர அனுமதி கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ஓலைக்குடா பிரின்சோ ரைமண்ட் தாக்கல் செய்த பொதுநல மனு:


கச்சத்தீவில் புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவிற்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகுகளில் சென்றுவருகின்றனர். மார்ச் 14 முதல் 15 வரை திருவிழா நடைபெற உள்ளது.



பிளாஸ்டிக் மோட்டார் பொருத்திய பைபர் பிளாஸ்டிக் படகுகளில் ராமேஸ்வரம், ஓலைக்குடா பகுதி மீனவர்கள் கச்சத்தீவு சென்றுவர அனுமதி, பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை முதன்மைச் செயலர், ராமநாதபுரம் கலெக்டர், ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கு மனு அனுப்பினோம். மீன்வளத்துறை உதவி இயக்குனர் நிராகரித்தார். அதை ரத்து செய்து அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.



தமிழக அரசு தரப்பு: மரப்படகுகளின் உயரம் அதிகம். அதில் பயணிப்பது பாதுகாப்பானது. பைபர் படகு உயரம்குறைவு. அலைகள் எழும்பும் போது தாக்குபிடிப்பது சிரமம். அதில் பயணிப்பது பாதுகாப்பற்றது. இவ்வாறு தெரிவித்தது.


நீதிபதிகள் வெளியுறவுத்துறை முதன்மைச் செயலர், கலெக்டர், மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி மார்ச் 6 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement