பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டில்லி முதல்வர் ரேகா குப்தா

புதுடில்லி: டில்லியின் முதல்வராக பொறுப்பேற்ற ரேகா குப்தா, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ., டில்லியில் ஆட்சியைப் பிடித்தது. அண்மையில் நடந்த புதிய அரசு பதவியேற்பு விழாவில் ரேகா குப்தா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, டில்லியின் மகளாக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கொடுத்ததற்கு பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார்.


பிரதமருடனான சந்திப்பு புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரேகா குப்தா, 'மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில், இரட்டை இன்ஜின் அரசு, மக்கள் நலன் மற்றும் நல்லாட்சிக்கான பாதையில் பயணிக்கும். இதன்மூலம், வளர்ச்சியடைந்த டில்லி என்ற மக்களின் கனவை எட்ட முடியும்,' இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.


இதனிடையே, டில்லியில் தரமற்ற சாலைகளை சீரமைத்தல் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்களை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Advertisement