நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; கல்வி அதிகாரி சிறைக்கு தடை; உயர்நீதிமன்றம் உத்தரவு

9

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி விதித்த சிறை தண்டனைக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது.


தேனி மாவட்டம் சின்னமனுார் பாலகுமாரன் தாக்கல் செய்த மனு:ஒரு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணியில் சேர்ந்தேன். ஆய்வக உதவியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் பணிக்கு மாற்றப்பட்டு பணிவரன்முறை செய்யப்பட்டது.என்னை மீண்டும் ஆய்வ உதவியாளராக பதவி இறக்கம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.


இதை ரத்து செய்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி,'மனுதாரர் அனுப்பிய மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால் முதன்மைக் கல்வி அலுவலர் இந்திராணி மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தனிநீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார்.இந்திராணி ஆஜராகி வருத்தம் தெரிவித்து அவகாசம் கோரினார்.
நீதிபதி: இந்திராணிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை, ரூ. 2000 அபராதம் விதிக்கப்படுகிறது. இரு நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து இந்திராணி தரப்பில்,'தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிராக இரு நீதிபதிகள் அமர்வில் ஏற்கனவே மேல்முறையீடு செய்து நிலுவையில் உள்ளது.

தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்,' என மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தண்டனை விதித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

Advertisement