பூனிமாங்காடு பள்ளி கட்டடம் சேதம் மாணவர்கள் அச்சத்துடன் பயிலும் அவலம்

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு ஊராட்சிக்குட்பட்டது இருளர் காலனி. இங்கு,50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

இதில், 15 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். ஒரே ஒரு ஆசிரியர் பணியாற்றி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் பள்ளி கட்டடத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது கட்டடத்தில் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பள்ளி வகுப்பறை நுழைவு வாயிலில் கட்டடம் பழுதடைந்து உள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் வகுப்பறைக்கு சென்று வருகின்றனர்.

இக்கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை.

மேலும், பள்ளிக்கு சுற்றுசுவர் கட்ட வேண்டும் என, பல மாதங்களாக ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. பள்ளி வளாகத்தில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளி கட்டடத்தை சீரமைத்தும், சுற்று சுவர் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.

Advertisement