மூன்றாவது மொழி கற்பதுஎங்கள் எதிர்காலத்துக்கு நல்லது தானே... ஓங்கி ஒலிக்கும் பள்ளி மாணவர்கள்
மூன்றாவது மொழி கற்பதுஎங்கள் எதிர்காலத்துக்கு நல்லது தானே...
ஓங்கி ஒலிக்கும் பள்ளி மாணவர்கள்
மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தபோதும், எதிர்காலத்துக்கு, 3ம் மொழி கற்பது நல்லது தான் என, எதிர்கால தலைமுறையை சேர்ந்த, இன்றைய பள்ளி மாணவர்களே ஓங்கி ஒலிக்கின்றனர். மத்திய அரசின் புது கல்வி கொள்கைக்கு, வேறு எந்த மாநிலத்திலும் வராத எதிர்ப்பு, தமிழகத்தில் எழுந்துள்ளது. புது கல்வி கொள்கையில் முதலாவது தாய்மொழி, இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது பிராந்திய மொழி கற்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் ஹிந்தி இடம் பெற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள், மத்திய அரசு ஹிந்தியை திணிக்கிறது என கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில், காங்., ஆட்சியில் இருந்தபோதும், தற்போது கம்யூ., ஆட்சியில் உள்ளபோதும், மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அதேபோல் காங்., ஆளும் கர்நாடகாவிலும் கூட, மூன்றாம் மொழி கற்பிக்கப்படுகிறது. ஏன் தமிழகத்திலும் கூட, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 3ம் மொழி கற்பிக்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது தமிழக அரசியல்வாதிகள் தடுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தவிர மாணவர்கள் படிப்பில், 'அரசியல்' என்பது, தமிழகத்தில் தான் நடக்கிறது. இதனால், யார் எதிர்காலத்தை வைத்து அரசியல் நடக்கிறதோ, அவர்களே, 3வது மொழி கற்பது குறித்து என்ன சொல்கின்றனர் என பார்ப்போம். சேலம் மாவட்ட பள்ளி மாணவர்கள் கூறியதாவது:
மொழிக்கு வேண்டாம் தடை
தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, 3வதாக ஹிந்தியை கற்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கடந்த காலத்தில், 3ம் மொழி கடினமாக இருந்திருக்கலாம். தற்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில், இன்ஜினியரிங்கில் படித்து வந்த, 'கோடிங்' தற்போது பள்ளிக்கே வந்துவிட்டது. அதுபோல் குறைந்தது, 3 மொழி கற்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. இன்று கல்லுாரி மாணவர்கள் கூட ஜெர்மன், ஜப்பானிஷ் உள்ளிட்ட மொழிகளை கற்கின்றனர். இதனால் மொழி கற்பிப்பதில் தடை வேண்டாமே.
-- ரோஹித்
ஹிந்தி கற்பதில் தவறில்லை
வர்த்தகத்தில் இன்று வடமாநிலங்களை தவிர்க்க முடியாது. அங்கிருந்து கொள்முதல் செய்வது, இங்கிருந்து அனுப்பி வைப்பது என, நாடு முழுதும் வர்த்தகம் எளிதாகியுள்ளது. வர்த்தக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, ஹிந்தியின் முக்கியத்துவம் புரிந்து, சிறு வயதில் இருந்தே ஹிந்தியை கற்றுத்தந்துவிடுகின்றனர். மேலும் தமிழகத்திலேயே முடங்கி விடாமல் நாடு முழுதும் கல்வி கற்கவோ, தொழில் புரியவோ செல்ல வேண்டிய சூழல் இன்று உருவாகிவிட்டது. அதனால் ஹிந்தி கற்பதில் தவறில்லை.
- ரிஷப்
வளர்ச்சியை தான் ஏற்படுத்தும்
மத்திய அரசு பணிகளுக்கு செல்லும்போது, இந்தியாவின் எந்த பகுதிகளிலும் பணியாற்ற வேண்டி இருக்கும். அப்போது ஹிந்தி தெரிந்து கொள்வது அவசியம். பள்ளியில் உள்ள ஹிந்தி பாடம் குறைவாக உள்ளது என பலரும் டியூசன் சென்று ஹிந்தி படிக்கின்றனர். அதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மும்மொழி கொள்கை என்பது வளர்ச்சியை தான் ஏற்படுத்தும்.
- குமரகுரு
சுருங்குவது வளர்ச்சியை பாதிக்கும்
மாநில எல்லையோரம் உள்ள எழுத, படிக்க தெரியாத மக்கள் கூட, குறைந்தது, 3 மொழிகளை சரளமாக தெரிந்து வைத்திருப்பர். அதற்காக தமிழ் மொழிக்கு பாதிப்பு வரும் என்பது நம்ப முடியவில்லை. தொழில்நுட்பம் வளர்ந்து இன்று உலகமே உள்ளங்கையில் வந்துவிட்ட நிலையில், மொழியை காரணம் காட்டி, சுருங்குவது மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்.
- ஹரிநந்தன்
ஒன்றும் கெட்டு விடாதே
பள்ளிகளில் உள்ள மற்ற பாடத்திட்டங்களோடு ஒப்பிடும்போது, மொழிப்பாடங்கள் கற்பதில் சிரமமில்லை. அதுமட்டுமின்றி மொழிப்பாடத்தை
எளிதாக கற்க, இன்று வீடியோக்கள்,
கணினி கேம் என, பல தளங்கள்
உள்ளன. தனியார் பள்ளிகளில் உள்ள அனைவரும், ஹிந்தியை படிக்கத்தான் செய்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களும், ஹிந்தியை படிப்பதால் ஒன்றும் கெட்டுவிடாதே. மேலும் எங்கள் எதிர்காலத்துக்கு நல்லது தானே.
- ஆதித்யா.
கூடுதல் பலமாக இருக்கும்
பள்ளியில் படிக்கும் பலரும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தியோடு, பிரஞ்சு, ஜப்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து கற்கின்றனர். ஏனெனில் வெளிநாடு செல்லும்போது, அந்நாட்டு மொழி குறித்த அறிமுகமாவது இருக்க வேண்டும்.
இலவசமாக, பள்ளி பாடங்களை கற்றுத்தரும் பல வீடியோ தளங்கள், ஹிந்தியில் உள்ளன. ஹிந்தி தெரிந்திருந்தால், ஜே.இ.இ., நீட் போன்ற தேர்வுகளுக்கு எளிதில் தயாராக முடியும். இது அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
- அஸ்வந்த்
- நமது நிருபர் -
மேலும்
-
பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டில்லி முதல்வர் ரேகா குப்தா
-
கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்