நடிகை தொடர்ந்த பாலியல் புகார்கள்: சிக்கலில் சீமான்

8

நடிகை விவகாரமும், பாலியல் வன்கொடுமை புகாரும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நிவாரணம் தேடி நீதிமன்றம் போனவருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 'செய்த குற்றங்கள் சிறியவை அல்ல' என்று நீதிமன்றமே கூறி, வழக்கில் இருந்து அவரை விடுவிக்க மறுத்து விட்டது.

சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் மட்டுமே செய்தியாக வலம் வந்த நிலையில், சீமான் குறித்த நீதிபதியின் கடுமையான விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது.

திராவிட கட்சிகளுக்கு தன்னை மாற்றாக கூறி வந்த சீமான், தொடர்ந்து தனித்து போட்டியிட்டு, தேர்தல்களில் தோல்வியை தழுவி வருகிறார். ஆனாலும், தனக்கென தனி ஆதரவு வட்டத்தை கட்டமைத்து, கட்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சினிமாவில் அவரோடு நடித்த விஜயலட்சுமி என்பவர், சீமானுக்கு எதிராக பாலியல் புகார் கூறினார். அதாவது, திருமணம் செய்து கொள்வதாக கூறி, சீமான் வன்புணர்வு செய்ததோடு, ஏமாற்றி ஏராளமான பணத்தையும் பறித்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அதை அலட்சியம் செய்த சீமான், பின், நடிகை விஜயலட்சுமியை அழைத்துப் பேசி சரிக்கட்டினார். ஆனால், சமரச நிபந்தனைகளின்படி சீமான் நடந்து கொள்ளாததால் கோபமான நடிகை, அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியும், வீடியோ பதிவு வெளியிட்டும், சீமான் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்தார்.

சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில், சீமான் மீது பாலியல் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டதும், விஜயலட்சுமிக்கு துாது அனுப்பிய சீமான், அவருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்து, புகாரை வாபஸ் பெற செய்தார். ஆனால், புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி எழுதிய கடிதம், வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைக்கு கிடைக்காததால், அவர் வழக்கை தொடர்ந்து விசாரித்து, குற்றப்பத்திரிகை தயார் செய்யும் கட்டத்துக்கு சென்று விட்டார்.

இதை அறிந்ததும், உயர் நீதிமன்ற படியேறினார் சீமான். தன் மீதான வழக்கை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி இளந்திரையன் அதை தள்ளுபடி செய்து, 12 வாரங்களுக்குள் சீமான் மீது குற்றப்பத்திகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

சீமான் மீதான குற்றச்சாட்டுகள் சாதாரனமானவை அல்ல என்பதால், புகார் கொடுத்தவரே திரும்ப பெற்றாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கும் என நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இது, சீமானுக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை கடுமையாக விமர்சித்து வரும் சீமான், அதிகரித்து வரும் போதை கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள், போக்சோ வழக்குகள் குறித்து பலமான வாதங்களால் அரசை வறுத்தெடுக்கிறார்.

ஆனால், 'சீமான் மீது விஜயலட்சுமி கூறியிருக்கும் புகாரை பாலியல் வன்புணர்வு வழக்காகவே பார்க்க முடியும்' என, உயர் நீதிமன்றமே கூறியிருப்பதால், நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து பேசுவதற்கு தகுதி இல்லாத நபராக சீமானின் பிம்பம் சிதைந்துள்ளது.

பெண்களை மதிக்கும் முதல் நபராக தன்னை காட்டிக் கொண்டும், 33 சதவீதம் என்ன, 50 சதவீதம் ஒதுக்கீடு தருகிறேன் என்று தன்னுடைய வேட்பாளர்களாக பாதிக்கு பாதி பெண்களை நிறுத்தியும் அரசியல் செய்த சீமான், இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது என, புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின. விஜயலட்சுமி புகாரின் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக சொல்லி சமாளித்து வந்த சீமானால், இனி அந்த வாதத்தையும் முன்வைக்க முடியாது என அவர்கள் கருதுகின்றனர்.


- நமது நிருபர் -

Advertisement