ஒரு மாவட்டம்; 2 தொகுதி; 4 கோஷ்டி; தர்மபுரி தி.மு.க., பதவி பறிப்புக்கு காரணம் இதுதான்!

தர்மபுரி: தனக்கென ஒரு கோஷ்டியை வைத்துக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்தது, அடுத்தடுத்த தேர்தல்களில் சொதப்பல் காரணமாக, தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நீக்கப்பட்டுள்ளார்.
தர்மபுரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்பிரமணி செயல்பட்டு வந்தார். அவரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, இன்று 23ம் தேதி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான காரணம், மாவட்டத்தில் நிலவிய கோஷ்டிப்பூசல் தான். மாவட்ட செயலாளரான தடங்கம் சுப்பிரமணி, மாணவர் மற்றும் இளைஞர் அணியினரை அரவணைத்து செல்லவில்லை என்பது கட்சியினரின் குற்றச்சாட்டு. தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கி வைத்துக் கொண்டார்.
அவர்களுக்கு மட்டுமே முக்கிய பொறுப்புகளை வழங்கி வந்தார். மற்ற யாரையும் பக்கத்தில் சேர்க்கவில்லை. இதன் காரணமாக, முன்னாள் தி.மு.க., எம்.பி., செந்தில் குமார் தலைமையில் ஒரு அணி, பென்னாகரம் தர்மசெல்வன் தலைமையில் ஒரு அணி, முன்னாள் எம்.எல்.ஏ., இன்ப சேகரன் தலைமையில் ஒரு அணி என நான்கு அணிகளாக தர்மபுரி கிழக்கு மாவட்டம் பிரிந்தது.
மற்ற கோஷ்டியினர் அனைவரும், மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணிக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். இப்படி நான்கு கோஷ்டிகளாக கட்சி செயல்பட்ட காரணத்தால் தான், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல், அதற்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், தர்மபுரி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளில் பா.ம.க., கூடுதல் ஓட்டுகளை பெற்றது.
'மாவட்ட செயலாளர் தலைமை சரியில்லாததே, பா.ம.க., வேட்பாளர்கள் அதிக ஓட்டு பெற்றதற்கு காரணம்' என்று ஒன்றிய செயலாளர்கள் தலைமைக்கு புகார் அளித்து வந்தனர். அதன் எதிரொலியாக இப்போது தடங்கம் சுப்பிரமணி மாற்றப்பட்டுள்ளார்; புதிய மாவட்ட பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார் என்கின்றனர் கட்சியினர்.
தி.மு.க.,வில் இதேபோன்று, வேறு சில மாவட்டங்களிலும், பிரச்னைக்குரிய அல்லது செயல்படாத மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!
-
திண்டுக்கல்லில் சிசி 'டிவி' கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்
-
ஹிமாச்சல் பிரதேசத்தில் நிலநடுக்கம்! கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
-
சாலை வசதி இல்லை: சடலத்தை 3 கி.மீ., சுமந்து சென்ற கிராம மக்கள்
-
காலவரையற்ற வேலை நிறுத்தம்: மீனவர்கள் முடிவு
-
தமிழ்நாடு எங்கள் பெயர் அல்ல... எங்களின் அடையாளம்; ஸ்டாலின் காட்டம்