சாயப்பட்டறை கழிவுநீரால் கருப்பானது பவானி ஆறு

2

மேட்டுப்பாளையம்: சாயப்பட்டறை கழிவு நீரால், பவானி ஆற்று தண்ணீர், கருப்பு நிறமாக மாறி உள்ளது. இந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக பவானி ஆறு ஓடுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, சிறுமுகை மூளையூர் வரை, பவானி ஆற்றில், 17 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.

ஆற்றுத் தண்ணீரால், பல லட்சம் மக்கள் குடிநீர் பெற்று பயனடைந்து வருகின்றனர். ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாங்கொம்பில் இருந்து, சிறுமுகை ராமர் கோவில் வரை, பவானி ஆற்றில், கடந்த ஒரு வாரமாக தண்ணீர் கருப்பு நிறமாக மாறியது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமுகை எல்லைப் பகுதியில், பவானி ஆற்றின் கரையோரம், சிலர் சாயப்பட்டறைகள் அமைத்து, அதன் கழிவு நீரை சுத்தம் செய்யாமல், நேரடியாக சாக்கடையில் விட்டு வந்துள்ளனர். அந்த கழிவுநீர் ஆற்றில் கலந்ததால், தண்ணீர் கருப்பு நிறமாக மாறியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பவானி ஆற்று நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் துரைசாமி கூறுகையில், ''ஆற்றுத் தண்ணீர் கருப்பு நிறமாக மாறுவதற்கு என்ன காரணம் என, விசாரணை செய்த போது, சிறுமுகை பேரூராட்சி பகுதியில் இருந்து, சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக தெரியவந்தது. மனித உயிர்களோடு விளையாடும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, சாயப்பட்டறைகளை மூட வேண்டும்,'' என்றார்.

இந்நிலையில், ஆற்றுத் தண்ணீரை சாம்பிள் எடுத்து, அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள முதன்மை தண்ணீர் பகுப்பாய்வாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பவானி ஆற்றில், சாய கழிவுநீர் கலப்பதால் தான், நிறமும், தரமும் மாறியுள்ளது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு தரம் இல்லாத வகையில் உள்ளது' என கூறியுள்ளார்.

இதுகுறித்து, சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் கூறுகையில், சிறுமுகை பேரூராட்சி எல்லையில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த, ஏழு குடிசை தொழில் சாயப்பட்டறைக்கு நோட்டீஸ் கொடுத்து, மூடும்படி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement