கடற்கரை கோவில் இருளில் அவதி சோலார் மின்விளக்கு அமைப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாக நடைபாதையில், பயணியர் சிரமமின்றி நடக்க, 'சோலோர்' மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.
மாமல்லபுரத்தில், பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் உள்ளன. இந்திய, சர்வதேச பயணியர், அவற்றை கண்டு ரசிக்கின்றனர்.
தொல்லியல் துறை, இந்தியரிடம், தலா 40 ரூபாய், சர்வதேச பயணியரிடம், தலா 600 ரூபாய் என, நுழைவுக்கட்டணம் வசூலித்து அனுமதிக்கிறது.
ஐந்தாண்டுகளுக்கு முன், காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே, பயணியர் காண அனுமதிக்கப்பட்டனர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், கடந்த 2019ல் இங்கு சந்தித்த போது, பிரதான சிற்ப வளாகங்களில், அதன் பாரம்பரிய தன்மைக்கேற்ப, குறைவான ஒளி உமிழும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து, இரவு 9:00 மணி வரை, பயணியர் அனுமதிக்கப்பட்டு, மின்னொளியில் பிரகாசித்த சிற்பங்களை அவர்கள் ரசித்தனர்.
தற்போது கடற்கரை கோவிலில் மட்டும், இரவில் பயணியர் அனுமதி உண்டு. பிற சிற்பங்களில், இரவு அனுமதி இல்லை.
கடற்கரை கோவில் வளாக நடைபாதை உள்ளிட்ட இடங்களில், தரைமட்டத்தில் அமைக்கப்பட்ட ஒளி குறைவாக உமிழும் விளக்குகள், அடிக்கடி பழுதடைந்தன.
பயணியர் இருளில் நடக்க சிரமப்படுகின்றனர். தடுமாறி விழுகின்றனர். அவர்கள் நலன் கருதி, தொல்லியல் துறை தற்போது கம்பங்கள் அமைத்து, சோலார் மின்விளக்குகள் அமைத்து உள்ளது.