கண்காணிப்பு கேமரா அமைத்த காங்., கவுன்சிலருக்கு மிரட்டல்

திண்டுக்கல்: குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்துக் கொடுத்த காங்., கவுன்சிலரை மர்ம நபர்கள் மிரட்டியதால், பாதுகாப்பு கோரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சி நாகல்நகரை சேர்ந்தவர் கார்த்திக், 38; 21வது வார்டு காங்., கவுன்சிலர். அந்த வார்டிலுள்ள பஸ் ஸ்டாண்ட், சவுராஷ்டிராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்தன.

இதை தடுக்கும் விதமாக, பஸ் ஸ்டாண்ட் உட்பட 21வது வார்டு முழுதும், 110 சிசிடிவி கேமராக்களை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதியுடன், கார்த்திக் அமைத்துக் கொடுத்தார். இதனால், அந்த பகுதிகளில் நடக்கும் லாட்டரி விற்பனை, சட்ட விரோத மது விற்பனை, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு சிக்கல் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர் கார்த்திக் வீட்டிற்கு சென்று, அங்கிருந்தவர்களை மிரட்டியுள்ளனர். இதனால், தனக்கு பாதுகாப்பு வேண்டி, வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் புகார் அளித்தார். மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement