தோட்டக்கலை அலுவலர் குழாய் திருட்டில் சிக்கினார்

கூடலுார்: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பிளாஸ்டிக் குழாய்களை திருடி விற்பனை செய்த தோட்டக்கலை துறை அலுவலர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் பாசன வசதிக்காக வழங்க, கூடலுார் தோட்டக்கலை அலுவலகத்தில் வைத்திருந்த, 1.3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 150 பிளாஸ்டிக் குழாய்கள் கடந்த வாரம் மாயமாகின.

இது தொடர்பாக, துறை உதவி இயக்குநர் புகாரில் கூடலுார் போலீசார் விசாரித்தனர். இதில், அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன், விடுமுறை நாளில் குழாய்களை திருடி, நெல்லியாளம் பகுதி கடைக்காரருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக, தயானந்தன், 32, கடை உரிமையாளர் சதானந்தன், 40, டிரைவர் முத்துக்குமார், 45, ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்து, குழாய்களை பறிமுதல் செய்தனர்.

தயானந்தன், ஏற்கனவே சத்தியமங்கலம் அருகே நகை திருட்டு முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, சஸ்பென்ஷனில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு கூடலுார் தோட்டக்கலை துறை அலுவலராக பணியில் சேர்ந்து, மீண்டும் திருட்டு வழக்கில் சிக்கியுள்ளார்.

Advertisement