காகிதமில்லா சட்டசபை: எம்.எல்.ஏ.,க்களுக்கு பயிற்சி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

புதுச்சேரி : காகிதமில்லா சட்டசபை தொடர்பாக எம்.எல்.ஏ.,க்களுக்கான பயிற்சி வகுப்பினை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

புதுச்சேரி சட்டசபையை காகிதம் இல்லா சட்டசபையாக மாற்றும் விதமாக நேவா என்ற திட்டத்திற்கு மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம், முழு நிதியளிக்க இசைவு தெரிவித்து இருந்தது. அதன்படி, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, பாராளுமன்ற விவகாரங்கள் துறையின் ஒப்புதல் 2022ம் ஆண்டு பெறப்பட்டது.

அதன்பின், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கொல்கத்தாவை சேர்ந்த நிம்பஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஜூலை 2024ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, ரூ. 8.16 கோடிக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

தற்போது சட்டசபை வளாகத்தில் மின்னணு உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. சட்டசபை கூடத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் இருக்கையில் கைக்கணினி கருவி பொருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது. தேசிய தகவல் மையத்தின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நெட்வொர்க் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கும் பணி நிறைவு பெற்றது.

எம்.எல்.ஏ.,க்கள், செயலக ஊழியர்கள் மற்றும் பிற அரசுத்துறை ஊழியர்களுக்கும் நேவா மென்பொருள் பயன்படுத்தும் முறை பற்றி பயிற்சி அளிக்க, சட்டசபை வளாகத்தில் நேவா பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, சட்டசபையில் எழுப்பப்படும் வினாக்களும் மற்றும் அதற்கான விடைகளும் நேவா மென்பொருள் மூலம் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. சட்டசபை செயலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கணினி மயமாக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக காகிதமில்லா சட்டசபைக்காக எம்.எல்.ஏ.,க்கள், அரசு செயலர்கள், துறை தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ.,க்களுக்கான பயிற்சி வகுப்பினை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.

சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், சந்திர பிரியங்கா, அனிபால் கென்னடி, சிவசங்கரன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement