செயலர், ஊழியர் தட்டுப்பாட்டில் தள்ளாடும் மல்லல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம்

சிவகங்கை : சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையில் உள்ள மல்லல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலர், ஊழியர்களின்றி நகை, கால்நடை கடன் பெறமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கூட்டுறவு துறையின் கீழ் மல்லல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் 1977 ம் ஆண்டில் இருந்து, சாத்தரசன்கோட்டையில் செயல்படுகிறது. இங்கு ஒரு செயலரின் கீழ் உதவியாளர், நகை மதிப்பீட்டாளர் என 5 பேர் பணிபுரிந்தனர்.

இந்த சங்கத்தில் 3 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். 48 ஆண்டுகள் பழமையான இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித முயற்சிகளும் எடுக்கவில்லை.

குறிப்பாக தற்போது நகை அடமான கடன் பெறுதல், நகையை திருப்புதல், கால்நடை வளர்ப்பு கடன் பெற ஏராளமான விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வருகின்றனர். அங்கு செயலர் பணியிடம் காலியாக இருக்கிறது.

மேலும், ஒரே ஒரு உதவியாளர் தான் ஒட்டு மொத்த சங்கத்தின் பணிகளை பார்க்கிறார். மறவமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்க செயலர் தான் கூடுதல் பொறுப்பாக சாத்தரசன் கோட்டையில் உள்ள மல்லல் தொடக்க கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தை கவனிக்கிறார்.

நகை அடமான கடன், திருப்புதல், கால்நடை கடன் உள்ளிட்ட அனைத்து வங்கி பணிகளுக்கும் செயலரின் கையெழுத்து பெற்ற பின் தான் செயல்பாட்டிற்கு வரும். ஆனால், கூடுதல் பொறுப்பாக இந்த கடன் சங்கத்தை செயலர் பார்ப்பதால், அவரின்றி அனைத்து பணிகளும் சாத்தரசன்கோட்டையில் உள்ள மல்லல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முறையும் சங்கத்திற்கு அழையும் விவசாயிகள், செயலரின்றி எந்தவித பணிகளையும் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

ஆண்டிற்கு ரூ.1.5 கோடி வரை விவசாய கடன் வழங்கிய பெருமை கொண்ட இந்த சங்கத்திற்கு நிரந்தரமாக செயலர், உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement