லாரி மோதி மாணவர் பலி

பாகூர்: பாகூர் அருகே லாரி மோதிய விபத்தில் பைக்கில் சென்ற மாணவர் உயிரிழந்தார்.

கிருமாம்பாக்கம், வாணிதாசன் நகரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் சைலேஷ்குமார், 18; புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இவர், கடந்த 21ம் தேதி மாலை, யமஹா பைக்கில் பாகூருக்கு சென்றுகொண்டிருந்தார்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பின்னாச்சிகுப்பம் சந்திப்பில், சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரம் நோக்கி சென்ற டாரஸ் லாரி ஒன்று, பைக் மீது மோதியது. படுகாயமடைந்த சைலேஷ்குமார், புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.

அவரது தந்தை சுந்தர்ராஜன் கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், லாரி டிரைவர் குறிஞ்சிப்பாடி அடுத்த கோரணப்பட்டை சேர்ந்த சிவபெருமான் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ெஹல்மெட் அணிய போலீசார் வேண்டுகோள்



இந்த விபத்தில், தலையில் படுகாயமடைந்த நிலையில் பரிதாபமாக சைலேஷ்குமார் இறந்தார். ெஹல்மெட் அணிந்து இருந்திருந்தால், அவர் உயிர் தப்பி இருக்கலாம். விபத்தின் போது, சிறிய அளவில் தலையில் ஏற்படும் காயத்தால் கூட உயிரிழப்பு ஏற்படகூடும்.

தலைக்கவசம் உயிர்கவசம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பைக்கில் செல்லும் பொது, தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement