தேர்வு அச்சத்தை போக்க டாக்டர்கள் தயார்

14416 எண்ணிற்கு டயல் செய்யுங்கள்...

புதுச்சேரி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு பயத்தில் இருந்து விடுபட கட்டணம் இல்லாத 14416 தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை மனநல துறை டாக்டர் பாலன் கூறுகையில், 'பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் ரிலாக்ஸான மனநிலையில் இருக்க வேண்டும். போதுமான துாக்கம், நீர் ஆகாரம் எடுத்து கொள்ள வேண்டும். ஏற்கனவே படித்ததை மீள்பார்வை செய்தால் போதும்.

பதற்றம் பயம் தேவையில்லை. பதற்றம் பயம் இன்றி இருந்தால், படித்தது அனைத்தும் ஞாபகத்திற்கு வரும். படிக்கும்போது சரியான இடைவெளியில் ஓய்வு அவசியம். நீண்ட நேரம் கண் விழித்து படிக்க கூடாது. அரசு அறிவித்த கால அட்டவணைப்படி வகுப்பு முடிந்ததும், மாணவர்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

சிறப்பு வகுப்புகளுக்கு விருப்பம் இல்லாத மாணவர்களை அமர வைத்து கட்டாயப்படுத்தி வகுப்பு நடத்த கூடாது. அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். தேர்வு பயம் இருந்தால் மாணவர்கள் கட்டணம் இல்லாத தொலைபேசி 14416 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச மன நல ஆலோசனை பெறலாம்.

தேர்வு பயத்தில் இருந்து வெளியே வரும் வழிமுறைகளை மன நல ஆலோசகர்கள் வழங்குவர். பயம், பதற்றம் இன்றி தேர்வை எதிர்கொண்டு அதிக மதிப்பெண் பெறுவதிற்கு வாழ்த்துக்கள் என, கூறினார்.

Advertisement