தேங்காய்த்திட்டு வாய்க்கால் ரூ. 3.76 கோடியில் துார்வாரும் பணி

புதுச்சேரி: தேங்காய்த்திட்டு வாய்க்கால் ரூ. 3.76 கோடி மதிப்பில் துார்வாரி ஆழப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.

உழந்தை ஏரியின் உபரி நீர் வாய்க்கால் மற்றும் ரெட்டியார்பாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வழியாக வரும் பள்ள வாய்க்கால் மரப்பாலம் அருகே ஒன்றிணைந்து தேங்காய்த்திட்டு வழியாக சென்று கடலில் கலக்கிறது.

குடியிருப்புகள் அதிகரித்ததால், பள்ள வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது.

ஆண்டு முழுதும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மண் கழிவு பொருட்களால் தேங்காய்த்திட்டு புது துறைமுகம் வழியாக செல்லும் வாய்க்காலில் மண் துார்ந்து கழிவுநீர் கடலில் கலப்பதில் தடை ஏற்படுவதுடன், துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மீன்பிடி படகுகள் இந்த வாய்க்கால் வழியாக கடலுக்கு சென்று வர தடையாக உள்ளது.

இதனால் வாய்க்காலை ரூ. 3.76 கோடி மதிப்பில் 650 மீட்டர் நீளத்திற்கு துார்வாரி ஆழப்படுத்தும் பணி நேற்று துவங்கப்பட்டது.

பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட செயற்பொறியளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement