பள்ளிக்கல்விக்கு தி.மு.க., வாக்குறுதிகள் அளித்தது 24; நிறைவேற்றியது 7 மட்டுமே: வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா முதல்வர்

மதுரை: தி.மு.க., ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகும் நிலையில், அக்கட்சி 2021 தேர்தல் அறிக்கையில் அளித்த பள்ளிக் கல்விக்கான வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை. அதிகம் எதிர்பார்த்த 24 வாக்குறுதிகளில், 7 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற தகவலால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், அவர்கள் 2021 ல் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றிவிட்டதாகக் கூறிவருகின்றனர். அது தவறான தகவல் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உட்பட பலரும் விமர்சிக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அவரது பங்கிற்கு 'தி.மு.க., தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றிய வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என கொளுத்தி போட்டுள்ளார்.
இந்நிலையில், அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகும் கல்வித்துறையில் அரசு பள்ளி, ஆசிரியர், மாணவர்கள் சார்ந்து 2021 தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அளித்த வாக்குறுதிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டவை எத்தனை. தற்போது வரை அந்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவை எத்தனை என்பது குறித்து பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களிடம் கேட்ட போது அவற்றின் நிர்வாகிகள் கூறியதாவது:
அன்றைய தேர்தல் அறிக்கையில் மொத்தம் 505 வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அளித்தார். அவற்றில் பள்ளிக் கல்வி சார்ந்து மிக முக்கியானவையாக 24 வாக்குறுதிகள் இடம் பெற்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 7 ஐ மட்டுமே ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது. இது 29 சதவீதமே.
குறிப்பாக, மூன்றாண்டுகளுக்குள் தமிழகத்தை நுாறு சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலமாக உருவாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். வெளிப்படையான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு, பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் மொழிவழி சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியையும் பயில்வதற்கு வசதிகள் செய்யப்படும் உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேநேரம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு (4ஜி/ 5ஜி) இலவச வைபை வசதி செய்யப்படும்.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கும் திட்டம். மாவட்டம் தோறும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., எய்ம்ஸ், ஐ.ஐ.எம்., போன்ற உயர் கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை எழுத உயர் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல், வேளாண்மை ஒரு பாடமாக இணைக்கப்படும். 2013 ல் டி.இ.டி., தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுள்கால சான்றாக வழங்க சட்ட வழிவகை குறித்து ஆராயப்படும்.
பகுதிநேர ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரந்தரப்படுத்தப்படும். ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தொடக்க பள்ளிகளில் 75 சதவீதம் ஆசிரியைகளே நியமிக்கப்படுவர். ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்கப்படும். 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை களைந்து வேலைக்கு சம ஊதியம் நிர்ணயிக்கப்படும் உட்பட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
ஒரு துறையிலேயே இவ்வளவு வாக்குறுதிகளை நிறைவேற்றாதபோது பல்வேறு துறைகள் சார்ந்த 505 வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதுபோல் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் வெளியிடுவாரா என கேள்வி எழுப்பினர்.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?