முகவரி மாறிச்சென்ற தபால்களால் ெவளிச்சத்திற்கு வந்த பொய் புகார்

மூணாறு : மூணாறு அருகே முகவரி மாறிச்சென்ற தபால்களால் பொய்புகார் வெளிச்சத்திற்கு வந்தது.

இடுக்கி மாவட்டம் உப்புத்தரா அருகே அய்யப்பன் கோவில் பகுதி உள்ளது. அங்குள்ள தர்மசாஸ்தா கோயில்நிர்வாகிகள் மீது, மாட்டுக்கட்டா பகுதியைச் சேர்ந்த மாத்யூஜோசப் பெயரில் தபால் மூலம் இடுக்கி எஸ்.பி., க்கு புகார் அனுப்பப்பட்டது.

ஆனால் புகார் அனுப்பியவர் பெறுநர், அனுப்புநர் முகவரியை பரஸ்பரம் மாற்றி எழுதியதால் புகார் கடிதம் மாத்யூஜோசப்பிடம் கிடைத்தது.

அதனை பார்த்து கிறிஸ்தவரான மாத்யூஜோசப் அதிர்ச்சி அடைந்தார்.

அதில் கோயில் நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு இருந்தது.

அதனால் மதப்பிரச்னையை துாண்டும் வகையில் தனது பெயரில் பொய்யாக புகார் அளிக்கப்பட்டதாகவும், புகாரில் உள்ள கையெழுத்து தனக்கு நன்கு அறிமுகமானவருடையது எனவும் இடுக்கி எஸ்.பி., உப்புத்தரா போலீசாரிடம் மாத்யூ ஜோசப் புகார் அளித்தார்.

அதேபோல் பொய் புகார் அளித்தவர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கோயில் நிர்வாகிகளும் போலீசில் புகார் அளித்தனர். மேல் விசாரணை நடக்கிறது.

Advertisement