மாநகராட்சியில் 'மரண' ரோடுகள்; தாறுமாறு ரோடுகளில் தத்தித் தாவும் வாகன ஓட்டிகள் பீதி

மதுரை: மதுரை மாநகராட்சி ரோடுகளில் வாகனம் ஓட்டுவதும், மலைக் குன்றுகளில் சாகச பயணம் மேற்கொள்வதும் ஒன்றுதான் என நினைக்கும் அளவுக்கு ரோடுகள் பெயர்ந்தும், மேடுபள்ளங்களாகவும் தாறுமாறாக கிடக்கின்றன. புதிய ரோடு அமைக்கவும், சேதமான ரோடுகளை சீரமைக்கவும் நிதி ஒதுக்கி ஒரு மாதமாகியும், குடிநீர் திட்டப் பணிகள் முடியாததால் பணிகளை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் மொத்தம் 1976 கி.மீ.,க்கு 13 ஆயிரத்து 498 ரோடுகள் உள்ளன. இவற்றில் 733 ரோடுகள் சேதமடைந்தில், 620 கி.மீ., வரை 2019 முதல் 2024 வரை சீரமைக்கப்பட்டன. மீதமுள்ள 113.55 கி.மீ.,க்கு ரோடுகள் சீரமைக்கப்பட இருந்தது. 2024 அக்டோபர், நவம்பரில் பெய்த மழையால் ரோடுகள் மிகவும் மோசமான நிலைக்கு சென்றன.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் புதியரோடு அமைக்கவும், பழைய ரோடுகளை சீரமைக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன்படி 15.149 கி.மீ.,க்கு 71 ரோடுகள் அமைக்கவும், 743 ரோடுகளை சீரமைக்கவும் நிதி ஒதுக்க கோரி அரசிடம் கருத்துரு அனுப்பினர். முதற்கட்டமாக ரூ. 60 கோடி ஒதுக்கப்பட்டது. அதற்கான டெண்டர் விடுவிக்கப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த கான்ட்ராக்டர்களுக்கு இதுவரை 'ஒர்க் ஆர்டர்' வழங்கவில்லை.
இதனால் நகரில் பல பகுதிகளில் குண்டும் குழியுமான ரோடுகளில் தான் வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக அரசரடி சிக்னலில் இருந்து மதுரை கோட்ஸ் பாலம் வரையான ரோடு தான் மதுரையின் 'நம்பர் 1' சாகச ரோடாக உள்ளது. இந்த ரோட்டில் ஒருவாரம் தொடர்ந்து டூவீலரில் சென்றால், அடுத்து 'ஆர்த்தோ' டாக்டரை தான் தேட வேண்டும். இதேபோல் வண்டியூர் - ரிங்ரோடு செல்லும் ரோடு, அண்ணா பஸ் ஸ்டாண்ட் முதல் வைகை வடகரை பகுதி, பழங்காநத்தம், ஓபுளா படித்துறை - வைகை தென்கரை ரோடு, ராஜாமில் ரோடு- கர்டர் பாலம், எல்.ஐ.சி., பாலம் ஸ்டேஷன் ரோடு, ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, ஜீவாநகர் மெயின் ரோடு, செல்லுார் 50 அடி ரோடு, பெத்தானியாபுரம் அண்ணா மெயின் ரோடு, மேட்டுத்தெரு, ஆவின் பின்புறம் உழவர் சந்தை ரோடு... என வாகன ஓட்டிகளுக்கு 'மரண' பீதியை ஏற்படுத்தும் மோசமான ரோடுகளின் பட்டியல் தொடர்கின்றன. ஆனாலும் ரோடுகள் சீரமைப்பில் மாநகராட்சி அக்கறை செலுத்தவே இல்லை.
வாகன ஓட்டிகள் கூறியதாவது: மதுரை நகரில் டூவீலர்களில் செல்வதென்றால் அடிவயிறு கலங்குகிறது. பாலப் பணிகளால் பல இடங்களில் நெரிசல் ஏற்படுகிறது. பல சவால்களைத் தாண்டி தான் பயணிக்க முடிகிறது. ரோடுகளை சீரமைக்க மாநகராட்சி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மேயர், கமிஷனர் வழக்கமாக செல்லும் சொகுசு கார்களை தவிர்த்துவிட்டு, ஆட்டோ அல்லது டூவீலரில் ஒருமுறை இந்த ரோடுகளில் பயணித்தால் மக்களின் வலி தெரியும் என்றனர்.
மாநாராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டுவரும் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான குழாய்ப் பதிப்பு பணிகள் முடிந்த பின்பே ரோடு பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு முன் ரோடுகள் அமைத்தால் குழாய்ப் பதிப்பதற்காக தோண்ட வேண்டிய நிலை ஏற்படும். விரைவில் மோசமான ரோடுகள் சீரமைக்கப்படும் என்றனர்.
மேலும்
-
ஆட்டோ வாடகை தராததால் பூ வியாபாரி அடித்துக்கொலை
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
டில்லி நெரிசல் பலிகள்: விழிக்குமா ரயில்வே துறை?