குடிநீர் இணைப்பிற்கு பங்களிப்புத் தொகை கேட்பதால்... அதிருப்தி; 'ஜல்ஜீவன்' திட்ட நிதி வசூலில் திணறும் உள்ளாட்சிகள்

கம்பம்: இலவசம்' எனக் கூறிவிட்டு, பங்களிப்புத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்துவதால், 'ஜல் ஜீவன்' திட்ட நிதி தொகை வசூல் செய்வதில் உள்ளாட்சிப் பணியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.



ஊராட்சிகளில், 'ஜல் ஜீவன்', பேரூராட்சிகள், நகராட்சிகளில், 'அம்ரூத்' என்ற குடிநீர் திட்டம் உள்ளது. உள்ளாட்சிகளில் இத்திட்டத்திற்கான குடிநீர் ஆதாரங்களை உருவாக்கவும், மேம்படுத்தவும்தேவையான குடிநீர் ஆதாரங்களை உருவாக்கவும், மேல்நிலை தொட்டி கட்டுதல், பகிர்மான குழாய் பதித்தல், உறை கிணறு அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டது.



இதற்கு என, ஒவ்வொரு ஊராட்சிக்கும் அதன் பரப்பு, மக்கள் தொகை அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.



இத்திட்டத்தின் கீழ் தற்போது ஒவ்வொரு ஊராட்சியிலும் 500 முதல் 2 ஆயிரம் வரை புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. பேரூராட்சிகளிலும், நகராட்சிகளிலும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, இணைப்புக்கள் வழங்கப்பட்டு உள்ளன.



குடிநீர் இணைப்புக்காக டெபாசிட் ரூ.3 ஆயிரம் என்றும், 10 சதவீத பங்குத் தொகையை ஈவு செய்து, அதாவது அந்த ஊராட்சிக்கு அரசு வழங்கிய நிதியில், மக்களின் பங்கு தொகையை டெபாசிட்டுடன் சேர்ந்து வாங்கவும் அறிவுறுத்தப்பட்டது. மக்களின் பங்கு தொகை என்பது ரூ.ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாறுபடுகிறது.


இத்திட்டத்தில் வழங்கப்படும் இணைப்புகளுக்கு மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.30 வசூலிக்க முடிவான நிலையில், ரூ.60 வசூலிப்பது தொடர்கிறது. மேலும் பகிர்மான குழாய்களில் குடிநீர் குறைவாக கிடைக்கிறது என, புகார் எழுந்துள்ளது.



ஊராட்சிச் செயலர்கள் கூறுகையில், 'ஜல் ஜீவன் திட்டத்தில் இணைப்பு இலவசம், கட்டணம் இல்லை என வதந்தியை பரப்பப்பட்டது.



இதனால் ஊராட்சிகளில் குடிநீர் கட்டணம், பங்களிப்புத் தொகை, டெபாசிட் என மக்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை லட்சக்கணக்கில் உள்ளது.', என்றனர். இதே நிலை தான் பேரூராட்சிகளிலும், நகராட்சிகளிலும் நிலவுகிறது. 'இலவசம்' எனக்கூறி விட்டு பங்களிப்புத் தொகை, டெபாசிட் என கேட்பதால் பொது மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

Advertisement