அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் கர்நாடக சுகாதாரத் துறை 'அலெர்ட்'

பெங்களூரு: ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிராவில், பறவை காய்ச்சல் பரவுவதால், கர்நாடக சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. செக்போஸ்ட் அமைத்து, கோழிகள், முட்டை, இறைச்சி கொண்டு செல்வதை கண்காணிக்கிறது.

அண்டை மாநிலங்களான ஆந்திரா, மஹாராஷ்டிராவில் பறவை காய்ச்சல் தீவிரமடைகிறது. ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்தன. எனவே கர்நாடக சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. பறவை காய்ச்சல் பாதிப்புள்ள மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை, இறைச்சியை கர்நாடகாவுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

எல்லை மாவட்டங்களில், பறவை காய்ச்சல் குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பீதர் மற்றும் கலபுரகி மாவட்டங்களின், பல்வேறு தாலுகாக்களின் எல்லையில் செக்போஸ்ட் அமைத்து, வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன. பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல், பறவைகளின் கழிவுகளில் உள்ள கிருமிகளில் இருந்து பரவலாம். இது பறவையில் இருந்து பறவைகளுக்கு பரவும். கோழிப்பண்ணையில் பணியாற்றுவோர் கவனமாக இருக்க வேண்டும். பறவை கழிவுகள் உள்ள நீர் நிலைகள், பறவைகள் நீந்தும் ஏரி, ஆறு, நீச்சல் குளங்கள் மூலமாகவும், தொற்று பரவும்.

இறந்த பறவைகளின் உடல்களை அப்புறப்படுத்தும் போது, கையுறை, முக கவசம், கண்ணாடி அணிய வேண்டும். அதன்பின் கிருமி நாசினி பயன்படுத்தி, கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பறவைகளின் எச்சம் மற்றும் மண்ணில் கிருமி இருக்கும். எனவே எச்சத்தை அகற்றி, சுத்தம் செய்யும் போதும் கவனம் தேவை.

தொடர் காய்ச்சல், தொண்டை வலி, உடற் சோர்வு, வயிற்று போக்கு போன்றவை, பறவை காய்ச்சலின் அறிகுறிகளாகும். அறிகுறி தெரிந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிகிச்சை பெற்றால் குணமடையலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

....புல் அவுட்....

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் தென்படவில்லை. இது குறித்து, பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோழி இறைச்சி அல்லது முட்டை சாப்பிட்டால், பறவை காய்ச்சல் வரும் என்பது, தவறான கருத்தாகும். கோழியை வேக வைப்பதால், வெப்பத்தில் கிருமி அழியும். எனவே கோழி இறைச்சி, முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.

- அன்வர் அகமது, மருத்துவ அதிகாரி

Advertisement