அரசு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

9


சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டி வருகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தது.


இது சம்பந்தமாக அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கையை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு, அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மனித வள மேலாண் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இந்த நிலையில், தலைமை செயலகத்தில் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை குறித்து சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement