ஓடும் ரயிலில் திருடிய போலீஸ்காரர் கைது

1

சென்னை: காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண்ணிடம் பையை திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மைசூரிலிருந்து சென்னை வரும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சீரியல் நடிகை ரேணுகா, 30, தனது குடும்பத்தினருடன் நேற்று பயணித்துள்ளார்.

ரயில் சென்னை அம்பத்துார் அருகே வந்த போது ரேணுகா கைப்பையுடன் படுத்திருந்தார். வாலாஜா ரயில் நிலையத்தில், ரேணுகா பயணித்த பெட்டியில் ஒருவர் ஏறியிருக்கிறார்.

பின்னர் ரயில் புறப்பட்டபோது, ரேணுகாவிடம் இருந்த பையை பறித்துவிட்டு தப்ப முயன்றார்.

சுதாரித்த ரேணுகா, போராடி உள்ளார்.
அப்போது அந்த நபர் கைப்பையை ஓடும் ரயிலில் இருந்து எறிந்துவிட்டார். அப்போது ரயில் அம்பத்துார் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார் ரேணுகா. ரயில் நின்றதும் இறங்கிசென்று தனது பையை எடுத்துவந்துவிட்டார்.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் அந்த நபரை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த வசந்தகுமார்,33 என்று தெரியவந்தது. மேலும் அவர் போலீஸ்காரர் என்பதும், ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் காவல் நிலைய ஆய்வாளரின் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

தனது ஊருக்கு சென்றுவிட்டு வரும்போது இந்த திருட்டை செய்துள்ளார். ரேணுகா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement