மாணவியிடம் மொபைல் பறிப்பு 16 வயது சிறுவன் கைது

சென்னை,ஐஸ்ஹவுசில், பிளஸ் 2 மாணவியிடம் மொபைல் போன் பறித்த, 16 வயது சிறுவனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருவல்லிக்கேணியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவி, கடந்த 22ம் தேதி மாலை, ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலை வழியாக நடந்து சென்றார். தீர்த்தபாலீஸ்வரர் கோவில் அருகே மொபைல் போனில் பேசியபடி சென்றபோது, அவ்வழியாக ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் வந்த, இரு மர்மநபர்கள், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.

இதுகுறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுவன், மொபைல் போன் பறித்தது தெரியவந்தது. சிறுவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Advertisement