ஆந்திராவில் பரவும் பறவை காய்ச்சல் திருவள்ளூரில் தீவிர கண்காணிப்பு

திருத்தணி,
ஆந்திர மாநிலத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில், அதிகளவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த நோய், ஆந்திரா - தமிழக எல்லையோர மாவட்டங்கள் வாயிலாக, தமிழகத்திற்கு பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், சோதனைச்சாவடிகளில், கால்நடை துறையினர் சிறப்பு முகாம் அமைத்து, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில், கர்னுால் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், பறவைக் காய்ச்சலால் பல ஆயிரக்கணக்கான கோழிகள் பலியாகி வருகின்றன.
ஆந்திராவை ஒட்டி இருப்பதாலும், பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு பரவும் என்பதாலும், தமிழக எல்லையோர மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகளை, கால்நடை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறப்பு முகாம்கள்
அந்த வகையில், மாவட்ட சோதனைச்சாவடிகளில் சிறப்பு முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
ஆந்திர மாநில எல்லையோரமான திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி, ஊத்துக்கோட்டை பெரியபாளையம் சோதனைச்சாவடி மற்றும் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் சோதனைச்சாவடி என, மூன்று இடங்களில், கடந்த வாரம் முதல், கால்நடை துறை சார்பில், சிறப்பு முகாம்கள் அமைத்துள்ளனர்.
கால்நடை துறையில் ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் வீதம், 24 மணி நேரமும் ஆந்திரா பகுதியில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து கிருமி நாசினி தெளித்த பின், தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
கிருமி நாசினி
இந்த சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வெளிமாநில வாகனங்கள், எடுத்து வரப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றை, பதிவேட்டில் குறிப்பிடுகின்றனர். தவிர, வாகனங்களை சோதனை செய்த பின், வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி அடித்த பின், மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.
இதுகுறித்து, திருத்தணி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் தாமோதரன் கூறியதாவது:
ஆந்திராவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்பாடி, பெரியபாளையம் மற்றும் பெத்திக்குப்பம் சோதனைச்சாவடிகளில் சிறப்பு அமைத்து, வாகனங்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம்.
மூன்று ஷிப்ட்கள்
எட்டு மணி நேரம் வீதம் மூன்று ஷிப்ட்களாக பிரித்து ஒவ்வொரு ஷிப்டுக்கும், கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், உதவியாளர் என மூன்று பேர் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.
ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து, சரக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்கள் வாயிலாக முட்டை, இறைச்சி கோழி மற்றும் கோழி தீவனங்கள் கொண்டு வருவதை கண்காணித்து, வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்யப்படும்.
மேலும், வாகனங்களின் டயர்களுக்கு கிருமி நாசினி தெளித்து நோய் பாதிப்பு பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் என்றால், அந்த வாகனங்களை அனுமதிக்காமல் வந்த வழியே திருப்பி அனுப்பப்படும்.
பிற வாகனங்களை பரிசோதனை செய்த பின், மாவட்டத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழியர்கள் அவதிபறவை காய்ச்சல் தடுப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று சோதனைச்சாவடிகளில் கால்நடை துறையின் சார்பில், தற்காலிக சிறப்பு முகாம் அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அங்கு மருத்துவர் மற்றும் ஊழியர்கள் தங்கி பணிபுரிவதற்கான அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லை. அதாவது, கழிப்பறை, குடிநீர் வசதி மற்றும் மின்விளக்கு போன்ற வசதிகள் இல்லாததால், ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் அருகே உள்ள வீடுகள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண் மருத்துவர் மற்றும் பெண் ஊழியர்கள் வேலை செய்யும் போது கடும் சிரமப்படுகின்றனர்.
மேலும்
-
பெண் தொழிலாளர்களை விமானத்தில் சுற்றுலா அழைத்து சென்ற விவசாயி
-
குகைக்குள் கேசவநாதேஸ்வரர்
-
வேண்டிய வரம் அளிக்கும் ஷீரடி சாய்பாபா
-
இளைஞர் காங்., உறுப்பினர்களாக தி.மு.க.,வினர்; அமைச்சர்கள் தயவால் அரங்கேறிய தில்லுமுல்லு
-
1,200 ஆண்டு பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில்
-
'மாற்று வீட்டுமனை' கேட்ட முதல்வர் மனைவி 'தெரியவே தெரியாது' என்கிறார் சித்தராமையா