அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து * ரச்சின் ரவிந்திரா கலக்கல் சதம்

ராவல்பிண்டி: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி. நேற்று நடந்த லீக் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடக்கிறது. நேற்று ராவல்பிண்டியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, வங்கதேசம் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.
பிரேஸ்வெல் அபாரம்
வங்கதேச அணிக்கு கேப்டன் நஜ்முல் ஷான்டோ, தன்ஜித் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஜேமிசன், ஹென்றி பந்துகளில் சிக்சர் அடித்தார் தன்ஜித். ஜேமிசன் வீசிய 8வது ஓவரில் ஷான்டோ, 3 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்த போது, பிரேஸ்வெல் சுழலில் தன்ஜித் (24) அவுட்டானார்.
மெஹிதி ஹசன் (13), ரூர்கே பந்தில் அவுட்டானார். வங்கதேச அணி 20 ஓவரில் 97/2 ரன் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. அடுத்த 21 ரன் எடுப்பதற்குள் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பிரேஸ்வெல் பந்தில் தவ்ஹித் (7) அவுட்டாக, அனுபவ முஷ்பிகுர் ரகிமும் (2) இவரிடம் வீழ்ந்தார்.
'சீனியர் வீரர் மகமதுல்லா, 4 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். வங்கதேசம் 118/5 என திணறியது. அரைசதம் அடித்த ஷான்டோ, 77 ரன் எடுத்து வெளியேறினார். ரிஷாத், ஜாக்கர் ஜோடி இணைந்து அணியை மீட்க போராடியது. இதற்கு பலன் கிடைக்கவில்லை. ரிஷாத் (26), ஹென்றி பந்தில் அவுட்டானார். ஹென்றி பந்தை சிக்சருக்கு விரட்டிய ஜாக்கர், 45 ரன்னில் ரன் அவுட்டானார். டஸ்கின் 10 ரன் எடுத்தார்.
வங்கதேச அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன் எடுத்தது. நியூசிலாந்தின் பிரேஸ்வெல் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.
வில்லியம்சன் ஏமாற்றம்
எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு வில் யங், கான்வே ஜோடி துவக்கம் தந்தது. கடந்த போட்டியில் சதம் அடித்த யங் (0), டஸ்கின் அகமது வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் போல்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் (5), நாகித் ராணா பந்தில் விரைவில் கிளம்பினார். ரச்சின் ரவிந்திரா, கான்வே இணைந்தனர். கான்வே 30 ரன் எடுத்த நிலையில், முஸ்தபிஜுர் பந்தில் போல்டானார்.
ரச்சின் நம்பிக்கை
உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின், ஷான்டோ ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி என அடுத்தடுத்து அடித்தார். இவர் 95வது பந்தில் ஒருநாள் அரங்கில் நான்காவது சதம் எட்டினார். ரச்சின் 112 ரன் எடுத்து, ரிஷாத் பந்தில் அவுட்டானார். லதாம் (55) ரன் அவுட்டானார். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 240 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிலிப்ஸ் (21), பிரேஸ்வெல் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

4 சதம்
கடந்த 2023 உலக கோப்பை (இந்தியா) தொடரில் அறிமுகம் ஆன ரச்சின் ரவிந்திரா, 3 சதம் அடித்தார். நேற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிமுகம் ஆன இவர், மீண்டும் சதம் அடித்தார்.
இதையடுத்து ஐ.சி.சி., தொடரில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ஆனார் ரச்சின் (4 சதம், 11 இன்னிங்ஸ்). வில்லியம்சன் (34ல் 3), நாதன் ஆஷ்லே (35ல் 3) அடுத்து உள்ளனர்.

4 விக்கெட்
ஐ.சி.சி., தொடர்களில் ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் வீழ்த்திய 4வது நியூசிலாந்து பவுலர் ஆனார் பிரேஸ்வேல் (4 விக்/26 ரன்). முன்னதாக வெட்டோரி (2 முறை), சான்ட்னர், பால் வைஸ்மேன் தலா ஒரு முறை இதுபோல அசத்தினர்.

வங்கதேசம், பாக்., 'அவுட்'
'ஏ' பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இரண்டு வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறின. 2 போட்டிகளில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் கோப்பை வாய்ப்பை இழந்தன. தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு கூட செல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

1000 ரன்
நேற்று 30 ரன் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா. இவர், 30 போட்டியில் 1,082 ரன் எடுத்துள்ளார்.
* நியூசிலாந்தின் பிலிப்ஸ் (41ல் 1,017), 4 ரன் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ரன் என்ற இலங்கை எட்டினார்.

Advertisement