வழிநெடுக குப்பை கழிவு ஊராட்சியில் அவலம்

நடுக்குத்தகை, பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குத்தகை ஊராட்சி. இங்குள்ள நடுக்குத்தகை - எம்.டி.எச்., சாலை, முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 32.67 லட்சம் மதிப்பில் கடந்த 2023ல் சீரமைக்கப்பட்டது. மேலும், 5 ஆண்டு சாலை பராமரிப்பு பணிக்கு, 2.91 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

ஆனால், 810 மீட்டர் சாலை போதிய பராமரிப்பு இல்லாமல், இருபுறமும் குப்பை கழிவாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக திருநின்றவூர் மற்றும் பெரியபாளையம் நெடுஞ்சாலைக்கு எளிதில் செல்லலாம்.

குறிப்பாக, காந்தி நகர் முதல் பிரதான சாலை அருகே, சுற்றியுள்ள பகுதிவாசிகள் உணவு உள்ளிட்ட குப்பை கழிவை கொட்டி வருகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

உணவு கழிவுகளில் மேயும் கால்நடைகளால் விபத்து அச்சம் நிலவி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சாலையோரம் கொட்டப்படும் குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement