எனக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன காங்., - எம்.பி., சசிதரூர் காட்டம்

திருவனந்தபுரம்: ''காங்கிரஸ் கட்சியை விட்டால் வேறு புகலிடம் எனக்கு இல்லை என நினைத்தீர்களா?'' என, காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.


இங்குள்ள திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்கு முறை தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, காங்கிரசை சேர்ந்த சசிதரூர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். எழுத்தாளர், முன்னாள் துாதரக அதிகாரி என பன்முகம் கொண்டவர்.



சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி சந்தித்ததை வரவேற்றார். அதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்த போது, 'நம் நாட்டின் நலனை மனதில் வைத்தே பேசினேன். ஒரு அரசியல்வாதி எப்போதுமே, தான் சார்ந்த கட்சியை மனதில் வைத்து பேச முடியாது' என விளக்கம் அளித்தார்.


அந்த சர்ச்சை அடங்கிய நிலையில், இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் கூறினார். ஆளும் இடதுசாரிகள் குஷியான நிலையில், காங்கிரசார் கடுப்பாகினர்.


இதற்கு விளக்கம் தெரிவித்த சசிதரூர், 'கேரளாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து இருப்பதையே பாராட்டினேன். மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆட்சியை அல்ல' என்றார்.



எனினும், கேரள காங்கிரஸ் தலைவர்கள், தொடர்ந்து சசிதரூரை விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, சசிதரூர் கூறியதாவது:



காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் புத்தகங்கள், சொற்பொழிவுகள், உலகம் முழுதும் நிகழ்ச்சிகள் என எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.


அமெரிக்காவில் அதிகமாக சம்பாதித்து நன்றாகவே இருந்தேன். அதை விட்டு விட்டுத்தான், நாட்டுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்தேன்.



தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 19 சதவீதம் அளவுக்கு ஓட்டுகள் சரிந்து விட்டன. கேரளாவில் 27 சதவீதம் வரை இருக்கும். இதை வைத்துக் கொண்டு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க முடியுமா?


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement