போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையால் விபத்து அபாயம்
அம்பத்துார், அம்பத்துார் மண்டலம், 86வது வார்டு, அத்திப்பட்டு - வானகரம் சாலையில் மெட்ரோ குடிநீர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் எதிரே, 200 மீட்டர் நீளம் கொண்ட 8வது தெரு உள்ளது.
இதை, அத்திப்பட்டு, ஐ.சி.எப்., காலனி மற்றும் சுற்றுவட்டார மக்கள், அம்பத்துார் தொழிற்பேட்டை, முகப்பேர், திருமங்கலம், ஜெ.ஜெ., நகர் செல்ல பயன்படுத்துகின்றனர்.
தண்ணீர் லாரி, தொழிற்பேட்டை சார்ந்த லோடு வாகனங்கள் என, நாளொன்றிற்கு நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், பைக், ஆட்டோ, கார் போன்ற ஆயிரக்கணக்கான இலகுரக வாகனங்களும் சென்று வருகின்றன.
இந்த சூழலில், 8வது தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு சாலை தள்ளப்பட்டுள்ளது. சிதலமடைந்த சாலையில் தினமும் பயணிப்பதால், பைக் ஓட்டிகளுக்கு முதுகுவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.
அத்துடன், வாகனங்களும் பழுதடைகின்றன. குறிப்பாக, 'பீக் ஹவர்ஸ்' வேளைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பள்ளி மாணவ -- மாணவியர், வேலைக்கு செல்வோர் பாதிப்படைகின்றனர்.
எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள், வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக உள்ள 8வது தெருவில், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.